கொரோனா கிருமி, எந்தெந்த பொருட்களில் எவ்வளவு மணி நேரம் உயிர்ப்புடன் இருக்கும் என்று மருத்துவர்களும், ஆய்வாளர்களும் தெரிவித்துள்ளனர்.
உலகத்தையே பயங்கரமாக மிரட்டி வரும் கொரோனா வைரஸ் குறித்து, பல்வேறு தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், கொரோனா வைரஸ் கிருமி குறித்து அமெரிக்காவைச் சேர்ந்த சூழலியல் ஆய்வகத்தின் தலைவர் வின்சென்ட் முன்ஸ்பெர், ஆய்வு நடத்தி உள்ளார்.
அதன்படி, கொரோனா வைரஸ் கிருமியானது எந்தெந்த பொருட்களில் எவ்வளவு மணி நேரம் உயிருடன் இருக்கும் என்பதையும் அவர் கண்டுபிடித்துள்ளார்.
அந்த ஆய்வில், “பிளாஸ்டிக் பாட்டில்களில் சுமார் 3 நாட்கள், கொரோனா வைரஸ் கிருமி உயிருடன் இருக்கும்” என்பது தெரியவந்துள்ளது.
அதேபோல், சிலவர் பாட்டில்களில் 3 நாட்களும், அட்டைப் பெட்டிகளில் ஒரு நாளும் அந்த கிருமி உயிருடன் இருக்கும் என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும், சில்வர் பாத்திரங்களில் 13 மணி நேரமும், தாமிரத்தில் தயாரிக்கப்பட்ட பாத்திரங்கள் மற்றும் பொருட்களில் சுமார் 4 மணி நேரமும் கொரோனா கிருமி உயிருடன் இருக்கும் என்பதும் தெரியவந்துள்ளது.
குறிப்பாக, காற்றில் சுமார் 3 மணி நேரம் கொரோனா வைரஸ் கிருமி உயிருடன் இருக்கும் என்றும் அமெரிக்கா சூழலியல் ஆய்வகத்தின் தலைவர் வின்சென்ட் முன்ஸ்பெர் கூறியுள்ளார்.
இப்படியாக, கண்ணுக்குத் தெரியாத பொருட்களைத் தொடுவதின் மூலம் நம்மையும் அந்த வைரஸ் கிருமி தாக்கும் என்பதால் தான், ஒவ்வொரு பொருட்களைத் தொடும்போதும், கைகளை நன்றாகக் கழுவச் சொல்கிறார்கள் என்பதும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, ஒவ்வொரு மனிதனும், சராசரியாக ஒரு மணி நேரத்திற்கு சுமார் 23 முறை நாம் நமது முகங்களை, தொடுகிறோம் என்றும் ஒரு ஆய்வு கூறுகிறது.
அதேபோல் கண் மற்றும் மூக்கு பகுதிகளை தலா 3 முறையும், காது பகுதிகளை ஒரு முறையும் நாம், நம்மையும் அறியாமல் தொடுகிறோம் என்றும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைமுடி, வாய் ஆகியவற்றை தலா 4 முறை தொடுகிறோம் என்றும் கூறப்படுகிறது. இப்படியாக, நம்மையும் அறியாமல்.. நம்மையே நாம் தொடுகிற போது, இந்த கொரோனா வைரஸ் கிருமி தாக்குகிறது என்றும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து நாம் மீண்டு வந்தாலும், அந்த கிருமி நமது உடலில் சுமார் 8 நாட்கள் முதல் அதிகபட்சமாக 37 நாட்கள் வரை தங்கியிருக்கும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.