சென்னையில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா பரவல் காரணமாக, ராயபுரம் மண்டலத்தில் மட்டும் பாதிப்பு எண்ணிக்கை 1,272 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தின் தலைநகர் சென்னையில் மையம் கொண்டுள்ள கொரோனா என்னும் கொடிய வைரஸ், புயலைப் போல சென்னை மக்களைச் சுற்றிச் சுற்றி அடிக்கிறது. இதனால், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
சென்னையில் அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 1,272 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கோடம்பாக்கம் மண்டலத்தில் 1,077 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதேபோல், திரு.வி.க.நகரில் 835 பேருக்கும், தேனாம்பேட்டையில் 786 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், தண்டையார்பேட்டையில் 610 பேருக்கும், அண்ணாநகரில் 586 பேருக்கும், வளசரவாக்கம் மண்டலத்தில் 532 பேருக்கும், அடையாறு மண்டலத்தில் 391 பேருக்கும் கொரோனா பரவி உள்ளது.
அம்பத்தூரில் 321 பேரும், திருவெற்றியூர் 161 பேரும், மாதவரம் மண்டலத்தில் 133 பேரும், சோழிங்கநல்லூர் மண்டலத்தில் 101 பேரும், மணலியில் 93 பேரும், பெருங்குடியில் 92 பேரும், ஆலந்தூர் மண்டலத்தில் 84 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, சென்னையில் 60.67 சதவீதம் ஆண்களும், 39.30 சதவீதம் பெண்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக, இதனிடையே, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த இருவர் இன்று உயிரிழந்தனர்.
ஒட்டுமொத்தமாக சென்னையில் இதுவரை 7,125 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 57 அக அதிகரித்துள்ளது.
மேலும், டெல்லியிலிருந்து சென்னை வந்த பயணிகள் அனைவரையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 14 நாட்கள் தனிமைப் படுத்தப்பட்டுள்ளதாகச் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இதனிடையே, ஊரடங்கு முடியும் வரை சென்னையில் உள்ள அனைத்து அம்மா உணவகங்களிலும் இலவச உணவு வழங்கப்படும் என்று, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.