சென்னையில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்தை நெருங்கி வருவதால், சென்னைவாசிகள் கடும் பீதியடைந்துள்ளனர்.
தமிழகத்தின் பிற பகுதிகளில் கொரோனாவின் தாக்கம் சற்று குறைந்து காணப்படும் நிலையில், தலைநகர் சென்னையில் மட்டும் கொரோனாவின் தாக்கம் சற்றும் குறையாமல் அதே வீரியத்துடன், பலருக்கும் பரவி வருகிறது.
அதன்படி, சென்னை ராயபுரம் பகுதியைச் சேர்ந்த 36 வயது பெண் ஒருவர், கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் இன்று பரிதாபமாக உயிரிழந்தார்.
கொரோனா பாதிப்பால், சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 1,699 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகச் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
நேற்று சென்னையில் மட்டும் 567 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், முன் எப்போதும் இல்லாத அளவுக்கு நேற்று புதிய உச்சமாக ராயபுரத்தில் மட்டும் 161 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது, அப்பகுதி மக்களை கடும் பீதியில் ஆழ்த்தி உள்ளது.
அதேபோல், கோடம்பாக்கம் மண்டலத்தில் 1,231 பேருக்கும், திரு.வி.க.நகரில் 1,032 பேருக்கும் என கொரோனா தொற்று பரவி, பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்துள்ளது.
மேலும், தேனாம்பேட்டையில் 926 பேருக்கும், தண்டையார்பேட்டையில் 823 பேருக்கும், அண்ணா நகரில் 719 பேருக்கும், வளசரவாக்கத்தில் 605 பேருக்கும், அடையாறு பகுதியில் 472 பேருக்கும், அம்பத்தூரில் 376 பேருக்கும், திருவொற்றியூரில் 228 பேருக்கும், மாதவரத்தில் 186 பேருக்கும், சோழிங்கநல்லூரில் 130 பேருக்கும், மணலியில் 115 பேருக்கும், பெருங்குடியில் 112 பேருக்கும், ஆலந்தூரில் 96 பேருக்கும் கொரோனா தொற்று பரவி உள்ளது.
ஒட்டுமொத்தமாகச் சென்னையில் 8,801 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 9 ஆயிரத்தை நெருங்கி வருவதால், சென்னைவாசிகள் கடும் பீதியடைந்துள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டு இதுவரை சென்னையில் 68 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதேபோல், சென்னையில் கொரோனா தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, தனிமைப்படுத்தப்பட்ட தெருக்களின் எண்ணிக்கை 774 இருந்து 655 ஆக குறைந்துள்ளது.
ராயபுரம் மண்டலத்தில் 164 ஆக இருந்த தெருக்களின் எண்ணிக்கை, தற்போது 135 ஆக குறைக்கப்பட்டுள்ளது. திரு.வி.க.நகர் மண்டலத்தில் 124ல் இருந்து 105 ஆக குறைக்கப்பட்டுள்ளது. அத்துடன், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளிலிருந்து 86 பகுதிகள் விடுவிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக, சென்னையில் ஆண்கள் 60.31 சதவீதம் பேரும், பெண்கள் 39.67 சதவீதம் பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.