மே 3-ம் தேதிக்கு பிறகு அரசு அலுவலகங்கள் 33 சதவீத ஊழியர்களுடன் இயங்கலாம் என்று தமிழக அரசு, அரசாணை வெளியிட்டுள்ளது.

சென்னை தலைமை செயலகத்தில் இருந்தபடியே, தொழிலதிபர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி இன்று காணொலி காட்சி மூலம் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, மே 3 ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிய உள்ள நிலையில், உடனடியாக திறக்கப்பட வேண்டிய தொழில் சாலைகள் மற்றும் நிறுவனங்கள் குறித்து முக்கிய ஆலோசனை மேற்கொண்டார்.

இதனையடுத்து, தமிழக அரசு புதிய அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, “மே 3 ஆம் தேதிக்குப் பிறகு, அரசு அலுவலகங்கள் 33 சதவீதம் ஊழியர்களுடன் இயங்கலாம்” என்று அறிவித்துள்ளது.

மேலும், “நீர்ப்பாசனம், அணைகள், சாலைகள், செங்கல் சூளை, குடிநீர் வினியோகம், தூய்மை பணிகள், மின்சார பணிகள் ஆகியவற்றை மேற்கொள்ள அனுமதி” அளிக்கப்பட்டுள்ளது.

“சுத்திகரிப்பு நிலையங்கள், இரும்பு, சிமெண்ட், பெயிண்ட் உள்ளிட்ட ரசாயன ஆலைகள், கரும்பு, உர கண்ணாடி, டயர், மிகப்பெரிய காகித ஆலைகள் ஆகியவை தொடர்ந்து இயங்கவும்” அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, “100 நாள் வேலை திட்டத்துக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதது. 100 நாள் வேலை திட்டத்தில் மூன்றில் ஒரு பகுதியினர், தனி மனித இடைவெளியுடன் பணியாற்ற வேண்டும்” என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தமிழக அரசின் இந்த அனுமதி, கொரோனா கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குப் பொருந்தாது எனவும், தமிழக அரசின் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்வதற்கான நேரம் முடிந்ததால், சென்னை அண்ணா சாலையின் ஒரு பகுதியில் வாகன போக்குவரத்து முழுமையாக நிறுத்தப்பட்டு, சாலை முழுவதுமாக மூடப்பட்டுள்ளது. விதிகளை மீறி சாலையில் பயணிப்போரைக் கண்காணித்து, போலீசார் நடவடிக்கையும் எடுத்து வருகின்றனர்.