மே 3 ஆம் தேதிக்குப் பிறகு கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் பற்றிய அறிக்கையை முதலமைச்சர் பழனிசாமியிடம் வல்லுநர் குழு வழங்கி உள்ளது.
கொரோனா வைரசால் தமிழகம் உட்பட நாடு முழுவதும் 40 நாட்கள் ஊரடங்கு உத்தரவு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதனால், பல்வேறு நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்துவது குறித்து, நிதித்துறை கூடுதல் செயலாளர் எஸ்.கிருஷ்ணன் தலைமையில், சிறப்பு வல்லுநர் குழுவைத் தமிழக அரசு நியமனம் செய்தது.
இதனையடுத்து, அந்த குழு தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் குறித்து ஆய்வு செய்து, தங்களது முதல் அறிக்கையை ஏற்கனவே சமர்ப்பித்திருந்தது.
இதனிடையே, வரும் 3 ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ள பொது ஊரடங்கு, அதற்கு பிறகும் நீட்டிக்கப்படுமா என்பது குறித்து மத்திய - மாநில அரசுகள் இன்னும் முறைப்படி எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.
இந்நிலையில், மே 3 ஆம் தேதிக்குப் பிறகு தமிழகத்தில் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் பற்றிய இடைக்கால அறிக்கையை, முதலமைச்சர் பழனிசாமியிடம், வல்லுநர் குழு வழங்கி உள்ளது.
குறிப்பாக, தமிழகத்தில் எந்தெந்த பகுதிகளில் தொழில் தொடங்கலாம் என்பது பற்றி, தமிழக வல்லுநர் குழு ஆய்வு செய்து, அதன்படி இந்த 2 வது அறிக்கையை முதலமைச்சரிடம் சமர்ப்பித்துள்ளது.
நிதித்துறை கூடுதல் செயலாளர் எஸ்.கிருஷ்ணன் தலைமையிலான 17 பேர் கொண்ட வல்லுநர் குழு, இந்த இடைக்கால அறிக்கையை முதலமைச்சரிடம் சன்று முன்பு வழங்கி உள்ளது.
இதனைத்தொடர்ந்து, அந்த இடைக்கால அறிக்கையை முதலமைச்சர் பழனிசாமி படித்துப்பார்த்து, முக்கிய அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களிடம் ஆலோசனை நடத்தி வருகிறார்.
மேலும், நாளை நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்திலும், இந்த இடைக்கால அறிக்கை குறித்தும், ஊரடங்கை நீட்டிப்பது குறித்தும் முதலமைச்சர் ஆலோசனை நடத்தலாம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதனிடையே, சென்னையில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க சிறப்பு அதிகாரியாக வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன், நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும், தமிழகத்தில் மானியமில்லாத வீட்டு சமையல் கேஸ் சிலிண்டரின் விலை 192 ரூபாய் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.