தமிழகத்தில் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு செய்து முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாகத் தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இன்றுடன் 20 நாட்கள் ஆகும் நிலையில், தமிழக அளவில் 1,075 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது வரை 11 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். அதே நேரத்தில் இந்தியா முழுமைக்கும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10 ஆயிரத்தை நெருங்கும் நிலையில், பலி எண்ணிக்கை 334 அக அதிகரித்துள்ளது.
ஊரடங்கையொட்டி பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும், கொரோனா வைரசின் தாக்கம் குறையவில்லை. இதனால், ஊரடங்கை மேலும் நீட்டிக்க வேண்டும் என்று தமிழக சுகாதாரத்துறை மற்றும் உலக சுகாதாரத்துறை உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
மேலும், கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக இந்தியாவில் பிறப்பிக்கப்பட்ட 21 நாள் ஊரடங்கு உத்தரவு நாளையுடன் முடிவடையும் நிலையில், ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பான அறிவிப்பை பிரதமர் மோடி, நாளை காலை 10 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளதாகத் தகவல்கள் வெளியானது.
இந்நிலையில், தமிழகத்தில் நாளையுடன் ஊரடங்கு முடியும் நிலையில், முதலமைச்சர் பழனிசாமி இன்று தலைமைச் செயலகத்தில் முக்கிய ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ், தலைமைச் செயலாளர் சண்முகம் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் மற்றும் முக்கிய அமைச்சர்கள் கலந்துகொண்டு ஆலோசனை நடத்தினர்.
இதனிடையே, ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின் தமிழக அரசு சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அதில், தமிழகத்தில் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு செய்து முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
“தமிழகத்தில் ஒவ்வொருவரும் பாதுகாப்பாக இருப்பது தான் அரசுக்கு முக்கியம் என்றும், பல்வேறு தரப்பினரிடம் இருந்து வந்த கோரிக்கையை ஏற்று ஊரடங்கு ஏப்ரல் 30 ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.
தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக, “அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு மே மாதத்திற்கான அத்தியாவசியப் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும்” என்றும், அதன்படி “ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கிலோ துவரம் பருப்பு, சமையல் எண்ணெய், அரிசி விலையின்றி வழங்கப்படும்” என்றும் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
“குடும்ப அட்டைதாரர்களுக்கு மே மாதத்திற்கான பொருட்கள் விலையின்றி வழங்கப்படும் என்றும், பிற மாநில தொழிலாளர்களுக்கு மே மாதத்திற்கான அரிசி உள்ளிட்ட பொருட்கள் விலையின்றி வழங்கப்படும்” என்றும் கூறப்பட்டுள்ளது.
குறிப்பாக, “ஊரடங்கு நீட்டிப்பால் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு 2 வது முறையாக மேலும் 1000 ரூபாய் நிவாரணம் வழங்கப்படும்” என்றும் முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
“பேரிடர் மேலாண்மை சட்டம் 2005, 144 தடை உத்தரவின் படி, தற்போதுள்ள கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் என்றும். காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை பேக்கரிகள் இயங்கத் தடையில்லை; பார்சல்கள் மட்டுமே வழங்கப்படும்” என்றும் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.