கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் தொற்று பாதிப்பு அதிகம் உள்ள 6 மாவட்ட ஆட்சியர்களோடு, மருத்துவ நிபுணர் குழுவோடும், தலைமைச் செயலாளர் இன்று தீவிர ஆலோசனை மேற்கொள்கிறார்.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் பரவலானது 2 வது அலையாக மிக மோசமாக பரவி வருகிறது. இதனால், மிக கடுமையான பாதிப்புகள் நாடு முழுவதும் ஏற்பட்டு வருகிறது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3.79 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டு உள்ளது.

அத்துடன், இந்தியாவில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 3,645 பேர் உயிரிழந்து உள்ளனர். இது, உயிரிழப்பு 1.12 விகிதம் ஆக உயர்ந்து உள்ளது.

இதே நிலைதான், தமிழகத்திலும் மிக அதிகமாக கொரேனா பரவிக்கொண்டு வருகிறது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 16,665 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. நேற்று மட்டும் தமிழகத்தில் 98 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து இருக்கிறார்கள்.

தமிழகத்திலேயே அதிகபட்சமாக சென்னையில் ஒரே நாளில் 4 ஆயிரத்து 764 பேர் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆயிரத்து 219 பேரும், கோவை மாவட்டத்தில் 963 பேரும், திருவள்ளூர் மாவட்டத்தில் 751 பேரும், நெல்லை மாவட்டத்தில் 714 பேரும், தூத்துக்குடி மாவட்டத்தில் 594 பேரும் நோய்த் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

தமிழகத்தில் கொரோனாவின் கோர தாண்டவத்தைச் சற்று கட்டுப்படுத்தும் விதமாக, சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் ஆக்சிஜன் வசதியுடன் 500 படுக்கைகள் அமைக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டு உள்ளது.

அதே போல், சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையுடன் இணைந்து சென்னையில் மேலும் 3 கொரோனா சிகிச்சை மையம் அமைக்கவும் திட்டம் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

அத்துடன், “18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்றும், கொரோனா பரிசோதனை, மருத்துவமனைகளில் படுக்கை வசதி ஆகியவற்றை அதிகரிக்க வேண்டும்” என்றும், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், தமிழக அரசை அறிவுறுத்தி உள்ளார்.

இந்நிலையில், தமிழகத்தில் வரும் மே 2 ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை தமிழக சட்டமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதனால், ஊரடங்கு நடைமுறை மாற்றம் தொடர்பான அறிவிப்பு இன்று வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும், தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகம் உள்ள மாவட்டங்களில் கூடுதல் கட்டுப்பாடுகள் தேவையா என்பது தொடர்பாகத் தலைமைச் செயலாளர் இன்று தீவிர ஆலோசனை மேற்கொள்கிறார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், கொரோனா பரவல் அதிகம் உள்ள மாவட்டங்களான சென்னை, செங்கல்பட்டு, கோவை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தொற்று பரவல் அதிகமாக உள்ளதால், இந்த குறிப்பிட்ட மாவட்டங்களில் மட்டும் கூடுதலான கட்டுப்பாடுகளை விதிப்பது தொடர்பாக மிக முக்கியமாக ஆலோசனை மேற்கொள்ளப்பட இருக்கின்றன.

இதனால், கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள 6 மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி காட்சி மூலமாகத் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் ஆலோசனை மேற்கொள்கிறார்

இதில், காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, தேனி, திருப்பூர் மாவட்ட ஆட்சியர்கள் பங்கேற்கின்றனர். இவை தவிர, தலைமைச் செயலாளர் இன்று மருத்துவ நிபுணர் குழுவுடனும் ஆலோசனை நடத்துகிறார்.

ஏற்கனவே, வரும் மே 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கொரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கு விதிக்கலாம் என்று, உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ள நிலையில், இன்று நடைபெறும் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களுடனான ஆலோசனைக் கூட்டங்களின் முடிவில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சூழ்நிலையில் தான், காணொலி காட்சி மூலமாகத் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் நடத்தும் ஆலோசனை, மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.