சென்னையில் பரிசோதிக்கப்படும் 5 ல் ஒருவருக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருவது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
கொரோனா வைரஸ், தமிழகத்தின் பிற மாவட்டங்களில் முற்றிலும் குறைந்திருந்தாலும், தலைநகர் சென்னையில் மட்டும் அது மையம் கொண்டு, இன்னும் வேகமாகப் பரவி வருகிறது.
மேலும் வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து வருபவர்கள் அனைவரும் பரிசோதிக்கப்படும் நிலையில், பரிசோதனை எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்படவில்லை.
இதனால், சென்னையில் சராசரியாகத் தினமும் 4 ஆயிரம் பேர் வீதம் பரிசோதிக்கப்படுவதாக, தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பரிசோதனையில், 5 ல் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருவதும் தற்போது தெரியவந்துள்ளது.
அத்துடன், தமிழகத்தின் பிற பகுதிகளுடன் ஒப்பிடுகையில், சென்னையில் அதிக எண்ணிக்கையில் பரிசோதனை நடத்தப்பட்டாலும், தற்போது அது போதுமானதாக இல்லை என்று வல்லுநர்கள் உட்பட அனைத்து தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே, கடந்த மே 1 ஆம் தேதி மேற்கொள்ளப்பட்ட 9,615 பரிசோதனையில், 203 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இது மொத்த பரிசோதனையில், பாதிப்பு விகிதம் 2.1 சதவீதமாக இருந்தது.
தற்போது மே 31 ஆம் தேதி மேற்கொள்ளப்பட்ட 12,807 பரிசோதனைகளில் 1,149 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இது மொத்த பரிசோதனை பாதிப்பு விகிதம் 8.9 சதவீதமாகும்.
அதே நேரத்தில், ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்ட பின், சிறப்பு ரயிலில் பயணிப்போர், விமானங்களில் பயணிப்போர், சாலை வழியாக வெளி மாநிலங்களில் இருந்து வருவோர் என அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சோதனை எண்ணிக்கையை அதிகப்படுத்தாமல், அதேநிலையில் நீடித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
குறிப்பாக, சென்னையில் நாளொன்றுக்கு 4,000 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்படுவதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். அதன்படி, சென்னையில் ஜுன் 1 ஆம் தேதி 967 பேருக்கு கொருானா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், சென்னையில் கடந்த சில நாட்களாக சராசரியாக 800 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. இதனால், சென்னையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்பவர்களில் சராசரியாக 5 பேரில் ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு வருவது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.