வங்கிகளில் வாங்கிய எந்த கடனுக்கும் 3 மாதம் EMI கட்ட தேவையில்லை என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக, இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், அனைவரும் வாழ்வாதாரத்தை இழந்து வீட்டிலேயே முடங்கி உள்ளனர்.
இதனிடையே பொதுமக்களுக்குப் பயன் அளிக்கும் வகையில் மத்திய மாநில அரசுகள் பல்வேறு நலத்திட்ட உதவிகளை அறிவித்து வருகிறது.
அத்துடன், வங்கிகளில் வாங்கிய கடனுக்கு மாதம் தோறும் EMI கட்டுவது சாத்தியமில்லை என்றும், இதனால், EMI கட்டுவதற்கு கூடுதலாகக் கால கெடு விதிக்க வேண்டும் என்றும் பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில், இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ், “வங்கிகளில் வாங்கிய எந்த கடனுக்கும் மூன்று மாதம் தவணை கட்ட தேவையில்லை” என்று தெரிவித்துள்ளார்.
“ எல்லா வகையான கடன்களின், தவணைகளுக்கும் 3 மாதங்களுக்கு விலக்கு அளிக்க முடிவு செய்துள்ளதாகவும், கடன் வசூலிப்பை 3 மாதம் நிறுத்திவைக்க உத்தரவிட்டுள்ளதாகவும், இதனால் வாடிக்கையாளரின் சிபில் மதிப்பெண் பாதிக்கப்படாது என்றும் அவர் கூறினார்.
மேலும், “அரசு மற்றும் தனியார் வங்கிகளில் டெபாசிட் செய்திருப்பவர்களின் பணத்திற்கு முழு பொறுப்பு வழங்கப்படும் என்றும், உலக அளவில் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்து வருவதாகல், பொருளாதாரத்தின் நிலையான தன்மையைக் காக்கும் வகையில் செயல்பட்டு வருவதாகவும்” கூறியுள்ளார். .
அதேபோல், “ரெப்போ விகிதம் 5.15 சதவிகிதத்திலிருந்து, 4.4 சதவிகிதமாக குறைக்கப்படுகிறது என்றும், பொருளாதார மந்த நிலையைப் போக்கும் வகையில், செயல்பட்டு வருவதாகவும்” விளக்கம் அளித்தார்.
“தற்போது ரிசர்வ் வங்கி தீவிரமாகக் களத்தில் உள்ளது என்றும், சிறு மற்றும் குறு வியாபாரிகளின் பொருளாதார வட்டங்களைப் பாதுகாக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ் தெரிவித்தார்.