உலகளவில் கொரோனா பாதிப்பு 9 லட்சத்து 35 ஆயிரத்து 187 ஆக அதிகரித்த நிலையில், உயிரிழப்பு 47 ஆயிரத்து 192 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றால், உலக அளவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 10 லட்சத்தை நெருங்கி வருகிறது.

அமெரிக்காவில் மட்டும் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அந்நாட்டில் நேற்று ஒரே நாளில் சுமார் 26 ஆயிரத்து 473 பேருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டது. அத்துடன், நேற்று ஒரே நாளில் அமெரிக்காவில் ஆயிரத்து 49 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் கொரோனா தொற்று பரவிய நாள் முதல், நேற்று நிகழ்ந்த உயிரிழப்பே அதிகம் பட்சம் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது. அமெரிக்காவில் வேகமாக பரவும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இதுவரை 2,15,003 ஆக அதிகரித்துள்ளது.

உலக அளவில், அமெரிக்காவிற்கு அடுத்த படியாக ஸ்பெயின் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டில், 8,195 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், நேற்று மட்டும் 923 பேர் அங்கு உயிரிழந்துள்ளது, அந்நாட்டு மக்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

அதேபோல், ஸ்பெயின் நாட்டில் 1 லட்சத்து 4 ஆயிரத்து 118 பேர் கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அந்நாட்டில் இதுவரை 9,387 பேர் உயிரிழந்துள்ளனர். ஈரானில் இதுவரை ஒட்டுமொத்தமாக 3,036 பேர் மரணமடைந்துள்ளனர்.

இத்தாலியில் இதுவரை 1 லட்சத்து 10 ஆயிரத்து 574 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது. அந்நாட்டில் நேற்று ஒரே நாளில் 727 பேர் உயிரிழந்த நிலையில், அந்நாட்டில் இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 13 ஆயிரத்து 155 ஆக உயர்ந்துள்ளது.

இங்கிலாந்தில் நேற்று ஒரே நாளில் 563 பேர் கொரோனாவிற்கு பலியானார்கள். அதேபோல், பிரான்ஸில் நேற்று ஒரே நாளில் 509 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்தனர். இதுவரை அந்நாட்டில் 4,032 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல், இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, கொரோனா தோன்றியதாகக் கூறப்படும் சீனாவில் நேற்று 36 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. நேற்று சீனாவில் 7 பேர் உயிரிழந்த நிலையில், இதுவரை அந்நாட்டில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 312 ஆக அதிகரித்துள்ளது. அங்கு, இதுவரை 81,554 பேர் கொரோனாவல் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மிகச் சரியாக உலகளவில் கொரோனா பாதிப்பு 9 லட்சத்து 35 ஆயிரத்து 187 ஆக அதிகரித்துள்ளது. உலக அளவில் உயிரிழப்பின் எண்ணிக்கை தற்போர் 47 ஆயிரத்து 192 ஆக உயர்ந்துள்ளது. இதனால், உலக மக்கள் யாவரும் கடும் பீதியடைந்துள்ளனர்.

இதனிடையே, கொரோனா தாக்கம் காரணமாக 2 ஆம் உலகப்போருக்குப் பின்னர், முதல் முறையாக விம்பிள்டன் டென்ன்ஸ் போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.