தமிழகத்தில் 411 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டோர் எண்ணிக்கை 90,412 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கடந்த ஒரு வாரக் காலமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது.
இந்நிலையில், நேற்று ஒரே நாளில் மட்டும் தமிழகம் முழுவதும் 102 பேருக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தற்போது 411 ஆக அதிகரித்துள்ளது.
இதில், 81 பேருடன் சென்னை முதல் இடத்திலும், 43 பேருடன் திண்டுக்கல் மாவட்டம் 2 வது இடத்திலும், 3 வது இடத்தில் 36 பேருடன் நெல்லை மாவட்டம் திகழ்வதாகவும் சுகாதாரத்துறை சுட்டிக்காட்டி உள்ளது.
மேலும், ஈரோடு மாவட்டத்தில் 32 பேரும், கோவை மாவட்டத்தில் 29 பேரும், தேனி மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் 21 பேரும், கரூர் மாவட்டத்தில் 20 பேரும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 18 பேரும், மதுரை மாவட்டத்தில் 15 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தமிழக சுகாதாரத்துறை குறிப்பிட்டுள்ளது.
அதே நேரத்தில், 1508 பேர் மருத்துவமனையில் தொடர்ந்து பரிசோதனை செய்துள்ளதாகவும், சுமார் 90, 412 பேர், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதுவரை தமிழகத்தில் 7 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து முழுவதுமாக குணமடைந்து வீடு திரும்பி உள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதேபோல், தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரேனா பாதிப்பு காரணமாக, வரும் 7 ஆம் தேதி பவுர்ணமியையொட்டி, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கிரிவலம் செல்லத்தடை விதித்து மாவட்ட ஆட்சியர் கந்தசாமி உத்தரவிட்டுள்ளார்.
இதனிடையே, தமிழகத்தில் நாளை இரவு 9.00 மணி முதல், 9.09 மணி வரை மின் விளக்குகளை அணைக்க பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ள நிலையில், மின்சார வாரியம் சில அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளது.
அதன்படி, “அனைத்து மின்சாதனங்களையும் அணைத்து விட்டு, ஒரே நேரத்தில் ஆன் செய்தால் மின்சார பிரச்சனை ஏற்படும் என்றும், இதனால் மின் விளக்குகளை மட்டும் அணைக்க வேண்டும் என்றும், மின் சாதனங்களை அணைக்க வேண்டாம்” என்றும் தமிழ்நாடு மின்சார வாரியம் கூறியுள்ளது.