“தமிழ்நாட்டில் இரவு நேர ஊரடங்கு போடுவது குறித்து இப்போது என்னால் எதுவும் கூற முடியாது” என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்தின் 2 வது அலை வீசிக்கொண்டு இருக்கிறது. இதனால், தமிழகத்தில் கொரோனா நோய் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

அதன்படி, சென்னை பகுதி முழுவதும் மற்றும் சென்னை சுற்றியுள்ள மாவட்டங்களான திருவள்ளூா், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கொரோனா வைரஸ் மிக வேகமாகப் பரவி வருகிறது.

அதே நேரத்தில், கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பல்வேறு புதிய கட்டுப்பாடுகளைத் தமிழக அரசு எடுத்து வருகிறது. இருந்தாலும் கொரோனாவின் தாக்கம் குறையாமல் இன்னும் வேகம் எடுத்து வருகிறது.

அதன் படி, இந்திய அளவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது, இது வரையில் இல்லாத அளவாக 1.86 லட்சமாக அதிகரித்து உள்ளது.

இதில், தமிழகத்திலும் ஒரு நாளில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையான கிட்டத்தட்ட 8 ஆயிரத்தை நெருங்கி உள்ளது.

இப்படியான நிலையில், இந்திய அளவில் மகாராஷ்டிரா, கர்நாடகா, ராஜஸ்தான் உள்ளிட்ட பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு உத்தரவு தற்போது பிறப்பிக்கப்பட்டு வருகிறது. இதனால், தமிழகத்திலும் இன்னும் அதிக அளவிலான கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், “கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில், பொது மக்கள் ஒத்துழைப்பு மிக அவசியம்” என்று, குறிப்பிட்டார்.

“தடுப்பூசி போடுவது மிக முக்கியம் என்பதை பொது மக்கள் அனைவரும் உணர வேண்டும் என்று கேட்டுக்கொண்ட ராதாகிருஷ்ணன், இரவு நேர ஊரடங்கு போடுவது குறித்து இப்போது என்னால் கூற முடியாது” என்றும், திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

அத்துடன், “இரவு நேர ஊரடங்கு போடுவது, கொள்கை சார்ந்த முடிவு என்றும், அதிகமான தொற்று ஏற்படும் இடங்களில் நாங்கள் தனி கவனம் செலுத்தி வருகிறோம்” என்றும், அவர் விளக்கம் அளித்தார்.

மேலும், “அடுத்து வரும் 2 வாரங்களுக்கு அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும், அரசு விதிமுறைகளைப் பின்பற்றினால் கொரோனா தொற்று எண்ணிக்கை அப்படியே குறையும்” என்றும், அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.

குறிப்பாக, “தடுப்பூசி வந்து விட்டதால், முகக்கவசம் அணிய வேண்டாம் என எண்ணக்கூடாது” என்றும், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், வலியுறுத்தினார்.

“கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி கொண்டவர்களுக்கு தொற்று ஏற்பட்டால் கூட, அதனுடைய பாதிப்பு குறைவாகவே இருக்கும் என்று வல்லுனர்கள் கூறுகின்றனர் என்றும், வீட்டிலிருந்து பணியாற்ற வாய்ப்பு உள்ளவர்கள் தொடர்ந்து வீட்டில் இருந்து பணியாற்ற நாங்கள் அறிவுறுத்து வருகிறோம்” என்றும், அவர் சுட்டிக்காட்டினார்.

முக்கியமாக, “ரஷ்ய தடுப்பூசிகள் தமிழ் நாட்டுக்கு கிடைப்பதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்றும், விரைவில் தமிழ் நாட்டிலும் ஸ்புட்னிக் என்ற ரஷ்ய நாட்டு தடுப்பூசிகள் கிடைக்கும்” என்றும், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நம்பிக்கைத் தெரிவித்தார்.

இதனிடையே, கொரோனா வைரஸ் 2 வது அலை காரணமாக, சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை குறைந்ததால் இன்று ஒரே நாளில் 18 விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.