சென்னை ஆவடியில் ஓடும் மின்சார ரயிலில் கல்லூரி மாணவர் ஒருவரின் பிறந்தநாளை கேக் வெட்டிக் கொண்டாடியபோது கல்லூரி மாணவர்கள், ரயிலின் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வேளச்சேரியில் இருந்து அரக்கோணம் மார்க்கமாக நேற்று மாலை சென்றுகொண்டிருந்த மின்சார ரயிலொன்றில், மாநில கல்லூரியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயணம் செய்தனர்.
இந்த ரயிலில் வசீகரன் என்ற மாணவரின் பிறந்தநாளை சக மாணவர்கள் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். மேலும் ரயிலின் கூரை மீதும், ஜன்னல் மீதும் ஏறி கலாட்டா செய்துள்ளனர். ரயிலில் தொங்கிய படி பயணம் செய்த நிலையில், இந்த மின்சார ரயில் ஆவடி ரயில் நிலையத்தை நெருங்கி கொண்டிருந்தபோது, ஒரு மாணவர் ரயிலின் அபாய சங்கிலியை பிடித்து இழுத்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து அபாய சங்கிலியை இழுப்பதற்கு காரணமாக இருந்த கல்லூரி மாணவர் வசீகரன் உட்பட மொத்தம் 4 மாணவர்களை காவல்துறையினர் ஆவடி ரயில்வே காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
ஆனால் விசாரணைக்கு அழைத்துச் சென்ற சக மாணவர்களை விடுவிக்க கோரி ஆவடி ரயில் நிலையத்தில் மின்சார ரயில் முன்பு அமர்ந்து பிற மாணவர்கள் மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து ஆவடி ரயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கமலக்கண்ணன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டிருந்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது போலீசார் தரப்பில் ‘விசாரணை முடிந்த உடன் மாணவர்களை விடுதலை செய்யப்படுவர்’ என உறுதியளிக்கப்பட்டது. இதனை ஏற்று மாணவர்கள் ரயில் மறியலை கைவிட்டனர். பின்னர் அதே ரயிலில் ஏறி அவர்கள் பயணித்தனர்.
ஆனால் அந்த ரயில் ஆவடியை அடுத்த இந்துக்கல்லூரி ரயில் நிலையத்துக்கு வந்தபோது, ‘இதுவரை கல்லூரி மாணவர்கள் வசீகரன் உட்பட பிற மாணவர்கள் யாரும் விடுவிக்கப்படவில்லை’ எனக்கூறி, அதை கண்டித்து மீண்டும் மாணவர்கள் அனைவரும் ரயில் முன்பு அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
அதேபோல் போலீசார் மாணவர்களை விடுவிக்கவும் செய்தனர். இதன் பிறகு சக மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். கல்லூரி மாணவர்களின் ரயில் மறியல் போராட்டத்தால் ரயில் சிறிது நேரம் தாமதமாக சென்றது. உடன் அந்த ரயிலில் பயணித்த பயணியர்களுக்கும் நேரமானது. ரேயில் போக்குவரத்து தாமதமானதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.