தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி இன்று ஓமந்தூர் அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.
கொரோனா தொற்று பரவலாக குறைந்து வரும் சூழலில், நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசிகள் போடும் பணி தீவிரமடைந்துள்ளது. முதற்கட்டமாக கோவாக்சின், கோவிஷீல்ட் ஆகிய தடுப்பூசிகள் மருத்துவக் களப்பணியாளர்கள், முன்களப் பணியாளர்களுக்கு செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து 60 வயதுக்கு மேற்பட்டோர், 45 வயதுக்கு மேலுள்ள நீரிழிவு, இதய நோய் உள்ளிட்ட இணை நோய் பாதிப்பில் உள்ளவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
இந்தியாவில் பிரதமர், குடியரசுத் தலைவர், துணை குடியரசுத் தலைவர் மற்றும் பல மாநில முதல்வர்கள், முக்கிய விஐபிக்கள், திரையுலகினர், அரசியல் தலைவர்கள் தடுப்பூசி போட்டு வந்துக்கொண்டு இருக்கிறார்கள். இதனையொட்டி தமிழகத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் என 3,606 இடங்களில் தடுப்பூசி போடப்படுகிறது. இதுவரை மொத்தமாக 11 லட்சத்து 25 ஆயிரத்து 703 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். இப்படியான நேரத்தில் நாம் பாதுகாப்புடன் இருக்க வேண்டும்" என தெரிவித்தார்.