குடியுரிமை சட்டத்திருத்த எதிர்ப்பு போராட்டத்தில் போலீசார் சுட்டில் 3 பேர் பலியான நிலையில், 44 மாவட்டங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நாடெங்கும் புரட்சித் தீ பற்றி எரிகிறது!
தீயை அணைக்க வேண்டிய அரசோ, பொதுமக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி, புரட்சித் தீயை மேலும் பரப்பப் பார்க்கிறது என்ற குற்றச்சாட்டும் தற்போது எழுந்துள்ளது.
குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளன. அதன் ஒரு பகுதியாகத் தலைநகர் டெல்லியில் கடந்த ஒரு வாரக் காலமாகத் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
அதன்படி தலைநகர் டெல்லி உட்பட பல்வேறு மாநிலங்களில் நேற்று 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நேற்று தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் அதிரடியாக போலீசார் கைது செய்தனர்.
இதனிடையே, குடியுரிமை சட்டத்திருத்த எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற போராட்டத்தில், போலீசார் நேற்று துப்பாக்கிச் சூடு நடத்தினர் இதில், மொத்தம் 3 பேர் சுட்டு படுகொலை செய்யப்பட்டனர்.
அதன்படி, உத்தரப்பிரதேச மாநிலம் முழுவதும் நேற்று போராட்ட தீ பற்றி எரிந்தது. அதன் ஒரு பகுதியாக லக்னோவில் நடைபெற்ற போராட்டத்தின்போது, போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள். அதில், 3 பேர் மீது குண்டு பாய்ந்தது. அதில், ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற இருவரும், உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதேபோல், கர்நாடக மாநிலத்திலும் நேற்று 144 தடை உத்தரவு போடப்பட்டிருந்தது. அப்போது, பெங்களூரு உட்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தடையை மீறி போராட்டம் நடைபெற்றது.
அப்போது, போராட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாத போலீசார், போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தினர். இதனையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது, போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், 2 பேர் குண்டடிபட்டு பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதனால், போலீசார் வாகனங்களுக்குப் பொதுமக்கள் தீ வைத்தனர். மேலும், போலீசார் மீது போராட்டக்காரர்கள் கல்வீச்சில் ஈடுபட்டனர். இதனையடுத்து, போராட்டம் காரணமாக மங்களூருவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துத் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருவதால், மத்தியப் பிரதேச மாநிலத்தில் மட்டும் 44 மாவட்டங்களில் இன்று 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், உத்தரப்பிரதேச மாநிலத்தின் பெரும்பாலன பகுதிகளில் இணையதள சேவையும் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால், அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.