தமிழக சட்டப்பேரவையில் “எனக்கு வழிகாட்டியாக இருப்பவர் துரைமுருகன்” என்று, மு.க ஸ்டாலின் புகழ்ந்து பாராட்டிய நிலையில், துரைமுருகன் உணர்ச்சிப் பெருக்கில் கண்கலங்கியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக சட்டப் பேரவைக் கூட்டத் தொடர் காலையில் கூடியது. கடந்த 4 நாட்கள் பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வந்தது.
இந்த விவாதங்களில், ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பங்கேற்று பேசினார்கள். விவாதத்தின் இறுதி நாளில், உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் பேசினார்கள்.
கடந்த 3 நாட்கள் விடுமுறை விடப்பட்டிருந்த நிலையில், துறைகள் வாரியாக மானியக் கோரிக்கை மீதான விவாதம் இன்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
அதன் படி, இன்றைய தினம் நீர்வளத்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் பங்கேற்று பேசிய முதலமைச்சர் மு.க ஸ்டாலின், துரைமுருகனுக்கு பாராட்டு தீர்மானத்தை முன்மொழிந்து பேசினார்.
அதன் படி, “கட்சிக்கும் ஆட்சிக்கும் உறுதுணையாக இருப்பவர் துரைமுருகன்” என்று, குறிப்பிட்டார்.
“சட்டப் பேரவையில் சிரிப்பலையை ஏற்படுத்தக் கூடியவர் துரைமுருகன் என்றும், அவரால் அழவைக்கவும் முடியும்” என்றும் சுட்டிக்காட்டினார்.
“கருணாநிதி, அன்பழகன் இழப்புக்குப் பிறகு அவர்களது இடத்தில் துரைமுருகனை வைத்து நான் பார்க்கிறேன் என்றும், கருணாநிதியின் அருகில் மட்டுமல்ல, அவரது மனதிலும் ஆசனம் போட்டு உட்கார்ந்திருப்பவர் துரைமுருகன்” என்றும், புகழ்ந்து பேசினார்.
“துரைமுருகனுடன் கருணாநிதி பேசிக் கொண்டே இருப்பதைப் பார்க்க எனக்கே பொறாமையாக இருக்கும்” என்றும், பெருமிதத்தோடு குறிப்பிட்டு பேசினார்.
அத்துடன், “தன் மனதில் பட்டத்தை உறுதியுடன் சொல்லக் கூடியவர் என்றும், எந்தத் துறையைக் கொடுத்தாலும் அதில் சிறப்புடன் செயல்படக் கூடியவர்” என்றும், அவர் தெரிவித்தார்.
“இந்தக் கூட்டத்தை அழ வைக்க நினைத்தால் அழ வைப்பார், சிரிக்க வைக்க நினைத்தால் அவர் சிரிக்க வைப்பார்” என்றும், அவர் கூறினார்.
“50 ஆண்டு காலம் சட்டமன்ற உறப்பினராக இருந்து பொன் விழா நாயகனாக துரைமுருகன் இருக்கிறார் என்றும், எனக்கு வழிகாட்டியாக அவர் இருப்பவர்” என்றும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பாராட்டி பேசினார்.
இப்படியாக, முதலமைச்சர் ஸ்டாலின் பேசும் போது, துரைமுருகன் உணர்ச்சிப் பெருக்கில் கண்கலங்கி போனார்.
அதன் தொடர்ச்சியாக பேசிய துரைமுருகன், “முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றிக் கடன் பட்டவனாக வாழ்நாள் முழுவதும் நான் இருப்பேன்” என்று, குறிப்பிட்டார்.
மேலும், “இவ்வளவு பற்றும் பாசமும் முதலமைச்சர் என் மீது வைத்திருப்பார்” என்று, நான் நினைக்கவில்லை” என்றும், துரைமுருகன் கூறினார். இதனால், அவையில் பெரும் மவுனம் நிலவியது. திமுக உறுப்பினர்கள் பலரும் கண்கலங்கி நிலைக்கு ஆளனார்கள்.
இதனிடையே, நீர்வளத்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசி முடித்த பிறகு றுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து பேசும் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், இறுதியாக தனது துறை சார்ந்த பல்வேறு புதிய அறிவிப்புகளையும் வெளியிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.