குடலிறக்க அறுவை சிகிச்சைக்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் திடீரென்று அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரசின் தாக்கம் மீண்டும் வேகமாக பரவி வரும் நிலையில், அதனால் ஏற்பாடும் பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
இப்படியான நிலையில், கடந்த 6 ஆம் தேதி நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முதல், அனைத்து கட்சித் தலைவர்களும் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து, தீவிர பிராச்சாரத்தில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் தீவிர சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். அப்போதே, அவருக்கு தொடர்ச்சியாக பேசி பேசி அவருக்குத் தொண்டை கட்டிக்கொண்டது. இதனை, அவர் பேசிய போது, அனைவரும் கவனித்தனர்.
இதனையடுத்து, ஏப்ரல் 6 ஆம் தேதி வாக்குப் பதிவு முடிந்த நிலையில், வரும் 2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை தொடங்க இருக்கும் இந்த நிலையில், தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த அனைவரும் தற்போது ஓய்வு எடுத்துக்கொண்டு இருக்கிறார்கள்.
அதன் படி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது குடும்பத்துடன் தற்போது திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு ஓய்வு எடுக்க வந்து உள்ளார்.
இப்படியான நிலையில் தான், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திடீரென்று உடல் நிலை பாதிக்கப்பட்டு சென்னை எம்ஜிஎம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார்
அவருக்கு, குடல் இறக்க பிரச்சனை ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், குடல் இறக்க பிரச்சனை தொடர்பாக அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள சென்னை அமைந்தகரையில் உள்ள உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் முதலமைச்சர் பழனிசாமி திடீரென்று அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
இதையடுத்து, மருத்துவமனையில் அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அப்போது, அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.
அதனைத்தொடர்ந்து, ஹெர்னியா என்ற குடல் இறக்க அறுவை சிகிச்சை அவருக்கு செய்யப்பட்டது. சிகிச்சைக்கு பிறகு, முதலமைச்சர் பழனிசாமி நலமுடன் இருப்பதாகவும், மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.
மேலும், ஏற்கனவே திட்டமிட்டபடி தற்போது இந்த அறுவை சிகிச்சைக்காக முதலமைச்சர் பழனிசாமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
குறிப்பாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அடுத்து வரும் 3 நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுவார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.