கடல் நீர் மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்கள் கடலில் மூழ்கும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
அமெரிக்காவின் கிளைமேட் சென்ட்ரல் என்னும் நிறுவனம் நடத்திய ஆராய்ச்சியில் தான், இந்த அதிர்ச்சிகரமான தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிளைமேட் சென்ட்ரல் நிறுவனம், பருவநிலை மாற்றம் குறித்து ஆய்வு மேற்கொண்டது. இதில், கடல் நீர் மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவது கண்டறியப்பட்டது. இதனால், பருவநிலை மாற்றங்கள் நிகழும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, கடல் நீர் மட்டம் உயர்வால், இந்தியாவின் முக்கிய நகரங்களாகத் திகழும் சென்னை, மும்பை, கொல்கத்தா, குஜராத், ஒடிசா ஆகிய நகரங்கள் கடலில் மூழ்கும் அபாயம் இருப்பது கண்டறியப்பட்டது. குறிப்பாக, சென்னை மாநகரம் மிகவும் அபாயகரமான கட்டத்தில் இருப்பதாகவும், இதன் மூலம் இந்தியா முழுவதும் 3 கோடியே, 60 லட்சம் பேர் அபாயத்தை எதிர்கொள்ள நேரிடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்தியா, இந்தோனேசியா, பங்களாதேஷ், சீனா, தாய்லாந்து, வியட்நாம் ஆகிய நாடுகள் இந்த பேராபத்தை எதிர்கொள்ள நேரிடும் என்றும் கிளைமேட் சென்ட்ரல் நிறுவனம் எச்சரித்துள்ளது. அத்துடன், கடல் நீர் மட்ட உயர்வால், ஆசியக் கண்டத்தைச் சேர்ந்த 75 சதவீத நாடுகள் இந்த பேராபத்தைச் சந்திக்க நேரும் என்றும் அந்நிறுவனம் சுட்டிக்காட்டி உள்ளது.
பருவ நிலை மாற்றத்தால், வரும் 2050 ஆம் ஆண்டுக்குள் இந்த பேரழிவை இந்தியா சந்திக்க நேரிடும் என்றும், இதன் மூலம் உலக அளவில் 30 கோடி பேர் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
அதேபோல், வரும் 2100 ஆம் ஆண்டில் மேலும் ஒரு பருவநிலை மாற்றங்கள் நிகழ்ந்து, கடல் நீர் மட்டம் உயரும் என்றும், அந்த நேரத்தில் உலக அளவில் சுமார் 20 கோடி பேர் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் இருப்பதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்த மிகப் பெரிய பேரிழப்பைத் தவிர்க்க, கார்பன் உமிழ்வைக் குறைக்க நடவடிக்கை மேற்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்றும் கிளைமேட் சென்ட்ரல் நிறுவனம் உலக நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.