சென்னையில் காவல் நிலையத்திலேயே பெண் காவலரிடம் ரவுடி ஒருவன் அத்துமீறி தவறாக நடக்க முயன்ற சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை மீனம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 32 வயதான ரவுடி லொள்ளு ராஜா, மீனம்பாக்கம் பகுதியில் நேற்று இரவு ஆட்டோ ஓட்டுநர் ஒருவரிடம் தகராறில் ஈடுபட்டிருந்தார். இதனால், பயந்துபோன அந்த ஆட்டோ ஓட்டுநர், மீனம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி, புகாரை பதிவு செய்த மீனம்பாக்கம் போலீசார், ரவுடி லொள்ளு ராஜாவை தேடி கடுப்படித்துக் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.
காவல் நிலையத்தில் வைத்து ரவுடி லொள்ளு ராஜாவிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, கஞ்சா போதையில் இருந்த ரவுடி லொள்ளு ராஜா, காவல் நிலையத்தில் இருந்த பெண் காவலர் ஒருவரிடம் அத்து மீறி தவறாக நடக்க முயன்றுள்ளார்.
இதனால், அதிர்ச்சியடைந்த அந்த பெண் காவலர் சத்தம் போடவே, அங்கிருந்த மற்ற காவலர்கள் அந்த ரவுடியை பிடித்து, அங்கு உள்ள வேற ஒரு அறைக்கு இழுத்துச் சென்றனர். அவரை தாக்கி உள்ளனர்.
அதன் தொடர்ச்சியாக, பெண் காவலரிடம் தவறாக நடக்க முயற்சித்ததாக அந்த ரவுடி மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
அதன் பிறகு, ரவுடி ராஜாவை நீதிபதி முன் ஆஜர்படுத்தப்படுத்திய போலீசார், அவரை சிறையில் அடைத்தனர்.
குறிப்பாக, தற்போது சிறையில் அடைக்கப்பட்ட ரவுடி ராஜா மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் இருப்பதாகவும், இதற்கு முன்பு அவர் பல முறை குற்றச்செயல்களில் ஈடுபட்டு சிறைக்கு சென்று வந்தது தெரிய வந்தது.
முக்கியமாக, தற்போது வேறு ஒரு குற்றத்திற்காக விசாரணைக்கு காவல் நிலையம் வந்த வந்த ரவுடி ராஜா, காவல் நிலையத்திற்குள்ளேயே, பெண் காவலரிடம் அத்து மீறி தவறாக நடக்க முயற்சித்த சம்பவம், போலீசார் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதே போல், திருவண்ணாமலை அருகே வெட்டவலம் பகுதியில் 12 ஆம் வகுப்பு மாணவியைக் கர்ப்பமாக்கிய இளைஞரை போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் அடுத்து உள்ள ஆவூர் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் பார்த்திபன், அதே கிராமத்தைச் சேர்ந்த ஏழை கூலி தொழிலாளியின் குடும்பத்தைச் சேர்ந்த 12 ஆம் வகுப்பு படிக்கும் சிறுமியுடன் நெருங்கிப் பழகி வந்துள்ளார். இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறி உள்ளது.
இந்த காதல் மயக்கத்தில் இருந்த பார்த்திபன், அந்த 12 ஆம் வகுப்பு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். இதன் காரணமாக, அந்த மாணவி தற்போது 2 மாத கர்ப்பமாகி உள்ளார். மாணவி கர்ப்பம் தரித்து இருப்பது, அவரது பெற்றோருக்கு தெரிய வந்த நிலையில், இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த அவர்கள், பார்த்திபனின் வீட்டிற்குச் சென்று, “என் மகளை திருமணம் செய்து கொள்ளும்படி” கூறி உள்ளனர்.
ஆனால், பார்த்திபனின் பெற்றோர், “சிறுமியின் கருவைக் கலைத்தால் மட்டுமே திருமணம் செய்து வைப்பதாக” தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், இரு வீட்டாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், ஆத்திரமடைந்த சிறுமியின் பெற்றோர் திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், பார்த்திபனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதனிடையே, தூத்துக்குடி சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து உள்ளது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 9 போலீசாருக்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.