சென்னை சேத்துப்பட்டு மகரிஷி வித்யா மந்திர் பள்ளி ஆசிரியர் ஆனந்தன் மீது மாணவி கொடுத்த பாலியல் புகாரின் பேரில், அவரை காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் அதிரடியாக கைது செய்து உள்ளனர்.
சென்னை கே.கே.நகர் பத்ம சேஷாத்திரி பாலபவன் பள்ளி வணிகவியல் ஆசிரியர் 59 வயதான ராஜகோபாலன், பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்து புகாரில், “இது போன்று பாதிக்கப்பட்ட மாணவிகள் புகார் அளிக்க போலீசார் தரப்பில் செல்போன் எண்கள்” அறிவிக்கப்பட்டன.
இதில், தமிழகம் முழுவதிலும் இருந்து பள்ளி, கல்லூரிகளைச் சேர்ந்த மாணவிகள், முன்னாள் மாணவிகள் என சுமார் 40 பேர் தங்கள் ஆசிரியர்களின் பாலியல்அத்துமீறல்கள் தொடர்பாக புகார் தெரிவித்ததாகக் கூறப்பட்டது.
இதில், சென்னையில் இருந்து மட்டும் 10 மாணவிகள் பாலியல் புகார் கூறியதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இப்படியாக, புகார்கள் பெறப்பட்ட பள்ளி, கல்லூரியின் பெயர்களையும், ஆசிரியர்களின் பெயர்களையும் போலீசார் பட்டியலிட்ட நிலையில், புகார்களின் உண்மைத் தன்மை குறித்து ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க போலீசார் களத்தில் இறங்கினார்கள்.
அப்போது, மாணவிகள் பாலியல் புகார்கள் தொடர்பாக சென்னை சேத்துப்பட்டு மகரிஷி வித்யா மந்திர் ஆசிரியர் ஆனந்தன் மீது, அவரிடம் படித்த பள்ளி மாணவி ஒருவர் பாலியல் புகார் குற்றச்சாட்டைச் சுமத்தினார்கள். அதன் தொடர்ச்சியாக, சென்னை சேத்துப்பட்டு மகரிஷி வித்யா மந்திர் ஆசிரியர் ஆனந்தனை, சஸ்பெண்ட் செய்து, பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து உத்தரவிட்டது.
இந்த விவகாரத்தில் மாவட்ட குழந்தைகள் நல ஆணையம் தானாக முன்வந்து விசாரணை மேற்கொண்டது.
அத்துடன், சென்னை மகரிஷி வித்யா மந்திர் ஆசிரியர் ஆனந்தன் மீது காவல் நிலையத்துக்குத் தனிப்பட்ட புகார்கள் எதுவும் வராத நிலையில், இந்த வழக்கு விசாரணையானது அப்படியே தேக்கமடைந்தது.
இந்த நிலையில் தான், அந்த பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவி ஒருவர், சென்னை கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆசிரியர் ஆனந்தன் மீது பாலியல் புகார் அளித்தார். அந்த புகார் மனுவில் “அந்த பள்ளியில் பயின்ற போது, ஆசிரியர் தனக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக” அந்த மாணவி குறிப்பிட்டு இருந்தார்.
இந்த புகாரை பெற்றுக்கொண்ட கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் துறையினர், ஆசிரியர் ஆனந்தனை போக்ஸோ சட்டத்தின் கீழ் அதிரடியாக கைது செய்தனர். அத்துடன், அவரை நீதிமன்றத்தில் முன்னிறுத்தவும் போலீசார் திட்டமிட்டு உள்ளனர்.
சென்னை உட்பட தமிழகம் முழுவதும் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் புகார்கள் அளித்த ஆசிரியர்கள் அடுத்தடுத்து சிக்குது பெற்றோர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.