குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக சென்னை ஸ்தம்பிக்கும் அளவுக்கு இஸ்லாமிய அமைப்புகள் பிரமாண்ட பேரணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதுடன், கல்லூரிகளுக்குள் விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே, சென்னையில் கடந்த வாரம் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக திமுக கூட்டணிக் கட்சிகள் சார்பில் மிக பிரமாண்டமான பேரணி நடைபெற்றது. இதனையடுத்து, அனுமதியின்றி பேரணியில் கலந்துகொண்டதாக சுமார் 8 ஆயிரம் பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டன.
இந்நிலையில், இன்று சென்னையே திரும்பிப் பார்க்கும் வகையில், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு இஸ்லாமிய அமைப்புகள் பிரமாண்ட பேரணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி, சென்னை கிண்டி அடுத்துள்ள ஆலந்தூர் நீதிமன்ற வளாகம் அருகில் இந்திய முஸ்லிம் லீக், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், அனைத்து ஜமாத்துக்களின் அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு இஸ்லாமிய அமைப்புகளும் இன்று ஒன்றிணைந்தனர்.
சிறுவர்கள், பெண்கள், ஆண்கள் என குடும்பம் குடும்பமாகப் பல ஆயிரம் கலந்துகொண்டு, 650 அடி நீளமுள்ள தேசியக் கொடியைக் கையில் ஏந்தியபடி பொதுமக்கள் பேரணியில் ஈடுபட்டனர்.
மேலும், மக்களை மத ரீதியில் பிரிக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை, மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.
அத்துடன், இந்த கோரிக்கையை வலியுறுத்தி, ஆலந்தூரிலிருந்து, கிண்டி ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி சென்றனர். இதனால், அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும், போலீசார் செய்வதறியாது திகைத்தனர்.