சென்னையில் திடீரென்று நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியடைந்து உள்ளனர்.
வங்கக் கடலில் சென்னையில் இருந்து வட கிழக்கில் சுமார் 320 கிலோ மீட்டர் தொலையில் தான் இந்த நில நடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
வங்கக் கடலில் ரிக்டர் அளவுகோலில் 5.1 ரிக்டர் அளவில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நில நடுக்கம் ஏற்பட்டிருக்கிறது.
இந்த நில அதிர்வை, அமெரிக்க நில அதிர்வு கண்காணிப்பு மையம் தற்போது உறுதி செய்திருக்கிறது.
வங்கக் கடலில் ரிக்டர் அளவுகோலில் 5.1 ரிக்டர் அளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கமானது, சென்னையில் பல்வேறு பகுதிகளிலும் உணரப்பட்டு உள்ளது.
குறிப்பாக, சென்னை நுங்கம்பாக்கம், கே.கே. நகர், அம்பத்தூர் உள்ளிட்ட சில பகுதிகளில் லேசான நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் மக்கள் அச்சத்தால் வீடுகளை விட்டு வெளியேறி சாலையில் கூடினர். இதன் காரணமாக, சென்னையில் பரபரப்பான சூழல் காணப்பட்டது.
சென்னையின் பல இடங்களில் இந்த நில அதிர்வு உணரப்பட்ட நிலையில், மிகச் சரியாக ஆந்திரா அருகே , வங்கக் கடலில் 5.1 ரிக்டர் அளவில் நண்பகல் 12.35 மணி அளவில் இந்த நில நடுக்கம் ஏற்பட்டு இருக்கிறது.
இந்த நிலநடுக்கத்தை, தேசிய நில அதிர்வு கண்காணிப்பு மையம் தற்போது உறுதி செய்திருக்கிறது.
நிலநடுக்கம் ஏற்பட்ட இந்த பகுதியானது, காக்கிநாடாவில் இருந்து சுமார் 296 கிலோ மீட்டர் தொலைவில், கிழக்கு திசையில் வங்கக் கடல் பகுதியில் அமைந்திருக்கிறது.
அதே நேரத்தில், “தமிழ்நாட்டில் கடற்கரை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால், தமிழகததின் 4 மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக” சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “சேலம், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் இடி, மின்னலுடன் இன்றைய தினம் கன மழைக்கு வாய்ப்பு” உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும், “தமிழ்நாட்டில் இதர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், நாளை திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகம்” கூறப்பட்டு உள்ளது.
“தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என்றும், ஆகஸ்ட் 26 ஆம் தேதி அன்று திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம் மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு இருக்கிறது” என்றும், சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.