சென்னை கோடம்பாக்கம் மேம்பாலம் அருகே கழிவுநீர் தேங்கியிருந்த சாலை பள்ளத்தில் தவறி விழுந்து நரசிம்மன் என்பவர் உயிரிழந்தார். இது தொடர்பாக சென்னை மாநகராட்சி விளக்கம் அளித்து உள்ளது.
சென்னையில் கடந்த வாரம் வீசிய புயல் மற்றும் மழையால் அங்குள்ள பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கி நின்றது. பல இடங்களின் உள்ள முக்கிய சாலைகளிலும் மழை நீர் தேங்கி நின்றது. இதனால், வாகன ஓட்டிகள் பெரும் அளவில் பாதிக்கப்பட்டனர்.
தற்போது, சென்னையில் மழை நீர் வடிந்துள்ள நிலையில், சென்னை கோடம்பாக்கத்தில் அமைந்துள்ள மேம்பாலம் அருகே 56 வயதான நரசிம்மன் என்ற முதியவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அப்பகுதியில் கழிவுநீர் தேங்கும் பாதாள சாக்கடை அருகே இருந்த பள்ளத்தில் மழை நீர் தண்ணீர் தேங்கி முற்றிலுமாக மறைந்திருந்த நிலையில், அங்கு பள்ளம் இருப்பது தெரியாமல், நரசிம்மன் அந்த பள்ளத்தில் தவறி விழுந்தார். இதில், அவரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், மயங்கி விழுந்து அவர் அங்கேயே சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இது குறித்து அந்த பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இது குறித்து அங்கு விரைந்து வந்த போலீசார், உயிரிழந்தவரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு, அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும். இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு, அங்குள்ள நொளம்பூரில் கால்வாயில் தவறி விழுந்து தாய், மகள் உயிரிழந்த நிலையில் மழைநீர் கால்வாயில் தவறி விழுந்து தற்போது மேலும் ஒருவர் உயிரிழந்திருப்பது சென்னை மக்களை கடும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. இது தொடர்பான செய்தி, தொலைக்காட்சிகளில் வெளியாகி சென்னை மக்களை பீதியில் ஆழ்த்தியது.
இந்நிலையில், இது தொடர்பாக சென்னை மாநகராட்சி மறுப்பு தெரிவித்து விளக்கம் அளித்துள்ளது.
அதில், “சென்னையில் இன்று காலை முதியவர் உயிரிழந்த விவகாரத்தில், அவரது மரணத்திற்கு வேறு காரணம் இருக்கக்கூடும்” என்று, சென்னை மாநகராட்சி கூறியுள்ளது.
முக்கியமாக, “மழைநீர் தேங்கிய பள்ளத்திலோ, கழிவுநீர் கால்வாயிலோ விழுந்து அந்த நபர் உயிரிழக்கவில்லை என்றும், மாரடைப்பால் உயிரிழந்திருக்கலாம்” என்றும், மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
மேலும், “நரசிம்மனின் பிரேதப் பரிசோதனை அறிக்கை வெளிவந்த பிறகே என்ன காரணம் என்பது முழுமையாகத் தெரிய வரும்” என்றும், சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறியுள்ளார்.
இதனையடுத்து, கழிவுநீர் தேங்கும் பாதாள சாக்கடை அருகே இருந்த பள்ளத்தில் தற்போது சீரமைக்கப்பட்டு வருகிறது. அந்த பகுதியில் இருக்கும் மிச்ச மீதி பள்ளங்களையும் மாநகராட்சி ஊழியர்கள் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, “கொரோனா நோயாளிகள் வீட்டில் குறிப்பிட்ட உத்தரவு இல்லாமல் நோட்டீஸ் ஒட்டத் தேவையில்லை” என்று, உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.