“சென்னையில் பைக் ரேஸில் ஈடுபட்ட இளைஞர் ஒருவரை, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் ஒரு மாத காலம் வார்டு பாய் வேலை பார்க்க வேண்டும்” என்று, நீதிபதி வேற லவல் தீர்ப்பு வழங்கி உள்ளது, இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.

சென்னையின் இரவு நேர வாழ்க்கைகள் நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவுக்கு, உள்ளது.

அதன் ஒரு பகுதியாக, சென்னையின் இரவு வாழ்க்கையில் “பைக் ரேஸ” என்ற ஒன்றும், தடுக்கவே முடியாத ஒன்றாக இருந்து வருகிறது. இதனால், இரவு நேரங்களில் சென்னையில் அதிக அளவில் விபத்துக்கள் ஏற்படுவதாகவும் தொடர்ந்து குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டு வந்தன.

அத்துடன், சென்னையில் கடந்த சில மாதங்களாகவே பைக் ரேஸில் பல இளைஞர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்த வண்ணம் இருந்தன.

இந்த நிலையில் தான், சென்னையில் கடந்த 21 ஆம் தேதி அன்று ஸ்டான்லி மருத்துவமனை அமைந்துள்ள ரவுண்டானாவில் இருந்து, வட சென்னை பகுதிகளான மூலக்கொத்தளத்திற்கு இளைஞர்கள் சிலர் பைக் ரேஸ் புயல் வேகத்தில் சென்று உள்ளனர்.

இதனைப் பார்த்து சற்று பயந்து போன அந்த பகுதி மக்கள் சிலர், இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்து உள்ளனர்.

அதத்துடன், இது குறித்து அந்த பகுதியைச் சேர்ந்த மெக்கானிக் சார்லஸ் என்பவர், சென்னை வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், மின்னல் வேகத்தில் பைக்கில் பறந்து சென்ற பைக் ரேஸர்களான கொருக்குப்பேட்டை பகுதியைச் சேர்ந்த 21 வயதான இளைஞர் பிரவீன் உள்ளிட்ட மொத்தம் 4 இளைஞர்களை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

இதனால், ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பிரவீன் என்ற இளைஞன் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவானது நீதிபதி ஜெயச்சந்திரன், முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி, பைக் ரேஸில் ஈடுபட்ட இளைஞன் பிரவீனுக்கு நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கினார்.

நீதிபதி வழங்கி இந்த நிபந்தனை தான், தற்போது தமிழகம் முழுவதும் இணையத்தில் பெரும் வைரலாகி, பேசும் பொருளாகவும் மாறி உள்ளது.

அதாவது, நீதிபதி வழங்கிய நிபந்தனை என்னவென்றால், “சென்னையில் உள்ள ஸ்டான்லி அரசு மருத்துவமனையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவில் வார்டு பாய்களுக்கு உதவியாக ஒரு மாதம் காலம் பணியாற்ற வேண்டும்” என்று, அதிரடியாக உத்தரவிட்டு உள்ளார்.

அத்துடன், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தினமும் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை ஒரு மாத காலம் பணியாற்ற வேண்டும்” என்றும், நீதிபதி நிபந்தனை விதித்து உள்ளார்.

மேலும், “ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் பணியாற்றுவது தொடர்பான அன்றாட தனது பணி அனுபவம் குறித்தும் தினமும் அறிக்கையாக தயார் செய்து மருத்துவமனை முதல்வருக்கு சமர்ப்பிக்க வேண்டும்” என்றும், நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டு உள்ளார்.

அதே போல், பைக் ரேஸில் ஈடுபட்ட இளைஞன் பிரவீன், ஒரு மாத காலம் மேற்கொள்ளும் பணியை, அந்த பணி முடிந்த பிறகு, அவசர சிகிச்சை பிரிவில் அந்த இளைஞன் பிரவீன் மேற்கொண்ட பணிகள் தொடர்பாக ஸ்டான்லி மருத்துவமனை முதல்வர் நீதிமன்றத்தில் அறிக்கை அளிக்க வேண்டும்” என்ற நிபந்தனைகளையும் நீதிபதி விதித்து உள்ளார்.

குறிப்பாக, “இரவு நேரத்தில் சாலையில் செல்லும் மூத்த குடிமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் இளைஞர்கள் தொடர்ந்து பைக் ரேசில் ஈடுபடுவதாகவும், பின்னால் அமர்ந்து பயணிப்பவர்கள், இரும்புக் கம்பிகளை சாலையில் தேய்த்து தீப்பொறி ஏற்படுத்தி மிரட்டும் தொணியில் செயல்படுவதாகவும்” நீதிபதி அப்போது தனது வேதனையையும் அவர் பதிவு செய்தார்.

அதே போல், “பைக் ரேஸில் ஈடுபடுவோரின் பெற்றோருக்கு போலீசார் முன்னதாக கடும் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

போலீசாரின் அந்த எச்சரிக்கையில், “சென்னையில் இருசக்கர வாகன பந்தயத்தில் ஈடுபடும் இளைஞர்களின் பெற்றோர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தொடர்ந்து பைக் ரேசில் ஈடுபட்டால் சம்மந்தப்பட்டவர்கள் மீது கைது நடவடிக்கை பாயும்” என்றும், கடுமையாக எச்சரிக்கை விடுத்து உள்ளது குறிப்பிடத்தக்கது.