படிக்கும் பள்ளி மாணவிகளுக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்த ரகசியமான சொகுசு அறையை, சிபிசிஐடி காவல் துறைக்கு சிவசங்கர் பாபா அடையாளம் காட்டி உள்ளது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் செயல்பட்டு வரும் சுஷில் ஹரி சர்வதேச பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா, ஆன்மீகவாதி என்ற போர்வையில் பள்ளியில் படித்து வந்த மாணவிகளைப் பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கியதாக, புகார் அளிக்கப்பட்டது. இதனால், மாமல்லபுரம் அனைத்து மகளிர் போலீசார், போக்சோ சட்டம் உள்ளிட்ட 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டு, தனிப்படை அமைக்கப்பட்டது.

இதனையடுத்து, தலைமறைவான சிவசங்கர் பாபாவை தனிப்படை போலீசார் தேடி வந்த நிலையில், டெல்லியில் பதுங்கியிருந்த அவரை சிபிசிஐடி போலீசார் அதிரடியாகக் கைது செய்துனர்.

அப்போது, அவர் தன்னுடைய அடையாளத்தை மாற்றும் விதமாக, மொட்டை அடித்த நிலையில் இருந்தார். பின்னர், அவரை நேற்று முன்தினம் சென்னை அழைத்து வந்து, எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் வைத்து போலீசார் அவரிடம் மிகத் தீவிரமாக விசாரணை நடத்தினர்.

அவரிடம் 5 அதிகாரிகள் சுமார் 10 மணி நேரத்திற்கும் மேலாக தீவிரமாக விசாரணை நடத்தினர்.

அத்துடன், சிவசங்கர் பாபாவை சிபிசிஐடி போலீசார் நேற்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் முன்பாக மருத்துவ பரிசோதனை செய்வதற்காக, தனிப்படை போலீசார் அவரை அரசு மருத்துவமனைக்கு தக்க பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர்.

அதே நேரத்தில், கேளம்பாக்கத்தில் உள்ள சிவசங்கர் பாபாவின் சுஷில் ஹரி பள்ளியில் சிபிசிஐடி போலீசார் 6 மணி நேரத்திற்கு மேல் சோதனை செய்து, விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, கேளம்பாக்கத்தில் உள்ள அவரது பள்ளிக்கு சிபிசிஐடி காவல் துறை சிவசங்கர் பாபாவை அழைத்துச் சென்றனர். அப்போது, சிபிசிஐடி காவல் துறைக்கு சிவசங்கர் பாபா Lounge என்று கூறப்படும், அவரது பிரமாண்ட சொகுசு அறையைக் காட்டினார். அதில் தான், பல ஆண்டுகளாக மாணவிகளுக்குப் அவர் பாலியல் தொல்லை கொடுத்துவந்ததாகக் கூறுகின்றனர்.

ஆனால், சிபிசிஐடி காவல் துறையினர் பள்ளியில் அதிரடி சோதனை நடத்தியபோது, பாபாவின் இந்த சொகுசு அறையைப் பள்ளி ஊழியர்கள் காட்டாமல் மறைத்து விட்டனர் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

அத்துடன், இந்தச் சொகுசு அறைக்குப் பதிலாக, வேறு ஒரு அறையை “பாபாவின் அறை” என பள்ளி நிர்வாகிகள் காட்டி இருக்கிறார்கள். ஆனால், மாணவிகள் வாக்குமூலத்தில் கூறிய அறையும், ஊழியர்கள் காட்டிய அறையும் முரண்பாடாக இருந்த காரணத்தினால், சிவசங்கர் பாபாவையே பள்ளிக்கு வந்து அறையைக் காட்டச் சொன்னதாக சிபிசிஐடி காவல் துறை கூறியுள்ளது.

மேலும், பள்ளியின் வாசலில் வைக்கப்பட்டுள்ள மேப்பிலும் பாபா சொகுசு அறை எங்கு உள்ளது என்கிற தகவல் இடம்பெறவில்லை.

இதனையடுத்தே, சிவசங்கர் பாபா செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி, உடனடியாக சிவசங்கர் பாபாவை
15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதன் படி, அவர் ஜூலை 1ஆம் தேதி வரை சிறையில் அடைக்கப்பட்டார்.

குறிப்பாக, “சிவசங்கர் பாபா மீது புகார் கொடுக்க வேண்டுமென்றால் inspocu2@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புமாறு” சிபிசிஐடி காவல் துறையினர் தெரிவித்து உள்ளனர்.

இதனிடையே, “பாபா மீதான குற்றச்சாட்டுகள் அதிர்ச்சி அளிக்கிறது என்றும், பாபா பெண்களிடம் அன்பாகப் பழகுவார்” என்றும், பாபாவின் சீடர் தெரிவித்துள்ளது
குறிப்பிடத்தக்கது.