பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் 110 அரங்குகளுடன் பொருநை நெல்லை புத்தகத் திருவிழா நடந்து வருகிறது.
திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் மற்றும் பபாசி இணைந்து பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில் புத்தகத் திருவிழாவை நடத்தி வருகிறது. கடந்த 17-ம் தேதி தொடங்கிய புத்தகத் திருவிழா கோலாகலமாக நடந்து வருகிறது அது 27-ம் தேதி வரை 11 நாட்களுக்கு நடத்தப்படுகிறது. 127 அரங்குகள் அமைத்து பல்வேறு தலைப்புகளில் லட்சகணக்கான புத்தகங்கள் இந்தப் புத்தகத் திருவிழாவில் இடம்பெற்றுள்ளன. முன்னணி பதிப்பகத்தினர் புத்தகத் திருவிழாவில் அரங்குகள் அமைத்து புத்தகங்கள் காட்சி படுத்தி உள்ளனர்.
மேலும் இந்த புத்தககண்காட்சியில் நான்கு நாட்களில் ஒரு லட்சத்தி 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தக பிரியர்கள் வருகை புரிந்துள்ளனர். அதன் மூலம் 50 லட்ச மதிப்பிலான புத்தகங்கள் நான்கு நாட்களில் விற்பனை நடைபெற்றுள்ளது.
இந்நிலையில் புத்தகம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் சிறுவர்கள் மற்றும் பொதுமக்களிடம் வாசிப்பு பழக்கத்தை அதிகரிக்கும் வகையிலும் புத்தகத் திருவிழாவில் பல்வேறு முயற்சிகளை மாவட்ட நிர்வாகம் எடுத்து வருகிறது. கலை, இலக்கியம், சமூக நாவல்கள், வரலாற்று நாவல்கள், தன்னம்பிக்கை மற்றும் சுயமுன்னேற்றத்துக்கான புத்தகங்கள், போட்டித் தேர்வுக்கான புத்தகங்கள் போன்ற பல லட்சக்கணக்கான புத்தகங்கள் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அனைத்து புத்தகங்களுக்கும் 10 சதவீத தள்ளுபடி அளிக்கப்படுகிறது.
புத்தகக் கண்காட்சி நடைபெறும் வ.உ.சி. மைதானத்தின் உள்விளையாட்டு அரங்கில் தொல்லியல்துறை சார்பில் பொருநை ஆற்றங்கரை நாகரிகத்தை விளக்கும் தொல்பொருட்கள் கண்காட்சி நடத்தப்படுகிறது. இங்கு கொற்கை, சிவகளை, ஆதிச்சநல்லூர் பகுதிகளில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சிகளில் சேகரிக்கப்பட்ட தொல் பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. மற்றொரு பகுதியில் வனத்துறை சார்பில் புகைப்படக் கண்காட்சி அமைக்கப்பட்டிருக்கிறது.
அதனைத்தொடர்ந்து இதில் ஒன்றாக திருநெல்வேலி பகுதியில் முதன்முதலாக” மணல் ஓவியம்” நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளிக் குழந்தைகள் முதியவர்கள் என அனைவரையும் கவரும் விதத்தில் நம் கண் முன்னே ஒரு மாயாஜால நிகழ்வு போல பொருநை நாகரீகம் தமிழ் பாடலுக்கு ஏற்ப ஓவியர் ராகவேந்திரா பல வண்ண மணல்களின் துணைகொண்டு தனது கற்பனையை நம் கண் முன்னே நிகழ்த்தினார்.