நீதிமன்றத்தை அவதூறாகப் பேசிய வழக்கில் முன் ஜாமீன் கோரி முன்னாள் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்து உள்ளார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே நடைபெற்ற ஊர்வலத்தின் போது
மேடை அமைத்துப் பேசுவதற்குக் காவல் துறை அனுமதி மறுத்தது.
தடையை மீறி அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா, காவல் துறையைக் கண்டித்ததுடன், நீதிமன்றத்தைக் கொச்சைப்படுத்தும் வகையில் மிகவும் இழிவான சொற்களில் பேசி கடுமையாக விமர்சித்தார்.
இது, ஊடகத்தில் பெரும் வைரலானது. நீதிமன்றத்தைக் கொச்சைப்படுத்தும் வகையில் பேசிய ஹெச். ராஜாவுக்கு, தமிழகத்தில் பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வந்தனர்.
இதனையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக திருமயம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அங்கு பதிவான வழக்கு திருமயம் நீதிமன்றத்தில் தற்போது வரை நிலுவையில் உள்ளது.
இந்த வழக்கில், ஹெச். ராஜா மீது குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்ய காவல் துறைக்கு உத்தரவிடக்கோரியே, இந்த வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, 2 மாதங்களில் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று, உத்தரவிட்டனர்.
ஆனால், அப்போது தமிழகத்தில் அதிமுக ஆட்சி நடைபெற்று வந்ததால், தமிழ்நாடு காவல் துறை தரப்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய மேலும், 3 மாத கால அவகாசம் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு விசாரணையின் பெரும்பகுதி முடிந்துவிட்ட நிலையில், கொரோனா பரவல் காரணமாகக் குற்றப் பத்திரிகையைத் தாக்கல் செய்வதில் கால தாமதம் ஆகிறது என அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பொங்கியப்பன், 3 மாத கால அவகாசம் வழங்க இயலாது என்று கூறி, 2 மாத கால அவகாசம் வழங்கி, வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.
இந்த வழக்கில், தற்போது திருமயம் கீழமை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் தான், நீதிமன்றத்தை அவதூறாக பேசிய வழக்கில் முன் ஜாமீன் கோரி முன்னாள் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.
“அந்த குற்றப் பத்திரிக்கையில், என்னை தலைமறைவாக உள்ளதாகத் தெரிவித்து உள்ளனர் என்றும், இது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகக் கூறப்பட்டு உள்ளது என்றும், இந்த வழக்கு விசாரணைக்கு கீழமை நீதிமன்றம் எனக்கு சம்மன் அனுப்பி உள்ளது” என்றும், அவர் குறிப்பிட்டு உள்ளார்.
“இதனால், இந்த வழக்கில் காவல் துறையினர் என்னை கைது நடவடிக்கையில் ஈடுபடாமல் இருப்பதற்காக, முன் ஜாமீன் வழங்க வேண்டும்” என்று, ஹெச்.ராஜா வலியுறுத்தி உள்ளார்.
“மேலும், நீதிமன்றம் விதிக்கும் அனைத்து கட்டுப்பாடுகளும், நிபந்தனைகளையும் பின்பற்றுகிறேன்” என்றும், ஹெச்.ராஜா அந்த மனுவில் தெரிவித்து உள்ளார். ஹெச்.ராஜா மீதான இந்த வழக்கு, விரைவில் விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.