யூடியூப் சேனலுக்காக பேய் வேடம் போட்டு பொதுமக்களைப் பயமுறுத்திய 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
பெங்களூரில் மாணவர்கள் சிலர், தனியார் யூடியூப் சேனலை நடத்தி வருகின்றனர். இதில், புதுமையான சில விசயங்களைச் செய்ய முற்பட்டுள்ளனர்.
இதற்காக ஆஸ்திரேலியா நாட்டுத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பேய் வேடமிட்டு, பொதுமக்களைப் பயமுறுத்தும் நிகழ்ச்சியைப் பார்த்துள்ளனர்.
அதனைப் பார்த்த மாணவர்கள், பெங்களூரிலும் அதன்படி பேய் வேடம் போட்டு, பொதுமக்களைப் பயமுறுத்தத் திட்டமிட்டனர். அதன்படி, நள்ளிரவு நேரத்தில் ஆட்கள் நடமாட்டம் குறைவாக உள்ள சாலையில், பேய் வேடமிட்டு கையில் கட்டையுடன் ஒருவர் நடந்து வருவதை, பின்னால் இருந்து வீடியோ டீம் படம் பிடித்துக்கொண்டிருந்தது.
அப்போது, சாலையில் செல்லும் மக்கள் பேய் வேடமிட்ட மனிதர் துரத்துவதும், அதைப்பார்த்து, மனிதர்கள் தலைகால் புரியாமல் நாலாபுறமும் சிதறி ஓடுவதுமாக இருந்துள்ளனர். சிலர், அவர்கள் ஓட்டி வரும் வாகனத்தை அங்கேயே போட்டுவிட்டு, பயத்தில் ஓட்டம் பிடித்துள்ளனர். இதனால், பாதிக்கப்பட்ட சிலர் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இது குறித்து விரைந்த வந்த போலீசார், பேய் வேடமிட்ட மனிதனிடம் கிட்டே போய் உள்ளனர். அப்போது, பேய் வேடமிட்ட மனிதன் போலீசாரையும் பயமுறுத்த முற்பட்டுள்ளான். ஆனால், போலீசார், பயமில்லாமல் அங்கேயே நின்றுள்ளனர். பேய் மனிதன் கிட்டே வந்ததும், அவனை செமயாக வசைபாடியுள்ளனர். இதனால், பயந்துபோன இளைஞர் தாங்கள் குரூப்பாக சேர்ந்து யூடியூப் சேனலுக்காக இந்த பேய் வேடம் போட்டதாக விளக்கம் அளித்தனர்.
இதனால், ஆத்திரமடைந்த போலீசார், யூடியூப் சேனல் வீடியோவுக்காக பொதுமக்களைப் பயமுறுத்திய 7 பேரையும் கைது செய்து அழைத்துச் சென்றனர். இதனால், அப்பகுதியில் நள்ளிரவு நேரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.