சென்னை ஐனாவரம் சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 15 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2018 ஆம் ஆண்டு, சென்னை ஐனாவரம் அடுக்கு மாடிக் குடியிருப்பில், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக அங்கு பணியாற்றி வந்த 17 பேர், போக்சோ சட்டத்தின் கீழ் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.
பின்னர், 17 பேருக்கு எதிரான வழக்கு விசாரணை, கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரி முதல், மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கில், குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் 7 சாட்சிகளும், அரசுத் தரப்பில் 36 சாட்சிகளும் விசாரிக்கப்பட்டு 120 ஆவணங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன. 11 மாதங்களாக நடைபெற்று வந்த இந்த வழக்கு விசாரணை, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நிறைவடைந்தது.
இதனையடுத்து, குற்றம்சாட்டப்பட்ட 17 பேரில் பாபு சிறையில் உயிரிழந்ததை அடுத்து, மீதமுள்ள 16 பேருக்கு எதிரான வழக்கில் இன்று தீர்ப்பு அளிப்பதாக, போக்சோ நீதிமன்ற நீதிபதி மஞ்சுளா அறிவித்திருந்தார்.
அதன்படி, இன்று தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. காலையில் நீதிமன்றம் கூடியதும், தீர்ப்பை வாசித்த மஞ்சுளா, “சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 16 பேரில் 15 பேர் குற்றவாளிகள்” என்று அறிவித்தார். மேலும், “தோட்டக்காரர் குணசேகரன் வழக்கிலிருந்து விடுவிக்கப்படுவதாக” அறிவித்தார்.
மேலும், குற்றவாளிகளுக்கான தண்டனை விபரங்கள், பிற்பகலில் அறிவிக்கப்படும் என்றும் நீதிபதி தெரிவித்தார்.