மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியாவை வீழ்த்தி, ஆஸ்திரேலியா அணி சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றது.
உலகமே எதிர்பார்த்து காத்திருந்த மகிளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி, ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்னில் இன்று நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களம் கண்ட ஆஸ்திரேலிய அணி, தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தது.
அந்த அணியில் ஹீலே 39 பந்துகளில் 75 ரன்கள் எடுத்து அசத்தினார். அவரைப் போலவே சிறப்பாக விளையாடிய மூனி, அதிகபட்சமாக 54 பந்துகளில் 78 ரன்கள் சேர்த்து அதிரடி காட்டினார்.
இதனால், 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு, ஆஸ்திரேலிய அணி 184 ரன்கள் சேர்த்தது. 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய மகளிர் அணி, 19.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 99 ரன்கள் மட்டுமே எடுத்து, படு தோல்வி அடைந்தது.
இந்திய அணியில் அதிகம் எதிர்பார்கப்பட்ட ஷபாலி வர்மா, வெறும் 2 ரன்களில் ஆட்டமிழந்தார். மந்தனா 11 ரன்னில் அவுட்டாக, மற்ற வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து, அதிர்ச்சி அளித்தனர்.
இந்திய அணியில் அதிகப் பட்சமாக தீப்தி ஷர்மா 33 ரன்கள் எடுத்தார். இதனால், 99 ரன்களில்இந்தியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதனையடுத்து, 85 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி, 5 வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.