நன்றி மடல் விடுத்திருப்பது இரட்டிப்பு மகிழ்ச்சியை அளிக்கிறது, போராளி சூர்யாவிற்கு வாழ்த்துகள் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

சூர்யா தயாரித்து நடித்து வெளியான படம் ஜெய் பீம் இப்படம் பல மொழிகளில் வெளிவந்து இந்திய அளவில் அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது. மேலும் இந்திய அளவில் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் ஜெய் பீம் படத்தைப் பாராட்டி சமூகவலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் சூர்யாவின் ஜெய் பீம் படத்தை பாராட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையில் சனாதன பிற்போக்குக் கருத்தியலின் மேலாதிக்கத்திலிருந்து மக்களை மெல்ல மெல்ல மீட்கும் வகையில் திரை ஊடகத்தை வெற்றிகரமாக கையாண்ட அரசியல் இயக்கம் இந்தியாவிலேயே திராவிட இயக்கம் தான் என்பது நாடறிந்த உண்மையாகும். குறிப்பாக பேரறிஞர் அண்ணா, கலைஞர் ஆகியோர் அதனை வெகு சிறப்பாக கையாண்டனர் என்று தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.

அதனைத்தொடர்ந்து எம்.ஆர்.ராதா, கலைவாணர், என்.எஸ்.கே. போன்ற மகத்தான கலை ஆளுமைகளைப் பயன்படுத்தி சாதி, மதம் தொடர்பான மூடநம்பிக்கைகளுக்கு எதிரான பகுத்தறிவுக் கருத்துக்களைப் பரப்பினார்கள். திராவிட இயக்கத்தின் சமூக சீர்த்திருத்த கருத்துக்களை பொதுமக்களிடம் கொண்டுபோய் சேர்ந்ததில் எம்ஜிஆர், சிவாஜி முதலானோரும் மிகப்பெரும் பங்களிப்பை ஆற்றியுள்ளனர் என தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் ரவிக்குமார் கடந்த 2006-ல் சட்டப் பேரவையில் எழுப்பிய கோரிக்கையின் விளைவாக அன்றைய திமுக ஆட்சியில் நரிக்குறவர் நல வராரியம் உருவாக்கப்பட்டது. மேலும் இத்திரைப்படத்தின் வருவாயிலிருந்து ஒரு கோடி ரூபாயை பழங்குடி இருளர் கல்வி அறக்கட்டளைக்கு நன்கொடையாக அளித்திருப்பது நடிகர் சூர்யாவின் பரந்த உள்ளத்தை வெளிப்படுத்துகிறது. ஏற்கனவே அகரம் அறக்கட்டளையின் மூலம் ஏழைக் குடும்பங்களைச் சார்ந்த பிள்ளைகளின் கல்விக்காக உதவி வருவது அனைவரும் அறிந்த ஒன்றே. எளியோரின் மீதான இவரின் கனிவும் அக்கறையும் பாராட்டுதலுக்குரியதாகும் என்று தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.

மேலும் பொதுமக்களின் அன்பையும் ஆதரவையும் பெற்ற திரைக்கலைஞர், தனது புகழையும், செல்வாக்கையும் எவ்வாறு எளிய மக்களின் நலன்களுக்காகப் பயன்படுத்த முடியும் என்பதற்கு நடிகர் சூர்யா ஒரு நல்ல முன்மாதிரியாக விளங்குவது போற்றுதலுக்குரியதாகும். கலைநாயகன் சூர்யா அவர்களின் சமூகப் பொறுப்புணர்வுடன் கூடிய தொண்டுள்ளத்தை தொழிலறத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் உளமாரப் பாராட்டுகிறோம் என்று வாழ்த்து தெரிவித்திருந்தார்.

அதனைத்தொடர்ந்து, அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக நடிகர் சூர்யா வெளியிட்டுள்ள பதில் அறிக்கையில், மக்கள் தொகையில் சிறுபான்மையினராக இருக்கும் பழங்குடிகள் நலன் சார்ந்து தங்களும் தங்கள் இயக்கமும் தொடர்ந்து செயல்படுத்துவது மகிகழ்ச்சி அளிக்கிறது. தங்கள் குறிப்படிருப்பதைப் போல தமிழக முதல்வர் பழங்குடியின மக்களின் நீண்டகால பிரச்சனைகளுக்கு தீர்வு காண உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளது அனைவருக்கும் மிகுந்த மனநிறைவை தந்துள்ளது. மேலும் பாதிக்கப்படும் மக்களின் பிரச்னைகளை அனைவரிடமும் கொண்டு செல்வது மட்டுமே கலைப்படைப்பின் மூலம் சாத்தியம். உண்மையான சமூக மாற்றங்களை அரசும், அரசியல் இயக்கங்களும் மட்டுமே உருவாக்க முடியும். ஊக்கமூட்டும் தங்கள் வார்த்தைகளுக்கு நன்றி என்று நடிகர் சூர்யா அறிக்கையில் தெரிவித்தார் .

இந்நிலையில் ட்விட்டரில், தலைவர் திருமாவளவன் சூர்யாவிற்கு பதில் அறிக்கை கூறியதாவது: பழங்குடினினரின் உரிமைப்போராளி பிரசமுண்டா பிறந்தநாளில் எமக்கு நன்றி மடல் விடுத்திருப்பது இரட்டிப்பு மகிழ்ச்சியை அளிக்கிறது என்றும் பொறுமையும் சகிப்புத்தன்மையும் தான் போராளிகளுக்கான பாதுகாப்புக்கவசங்கள் மேலும் போராளி சூர்யாவிற்கு எமது வாழ்த்துக்கள் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.