பாலியல் புகாரில் நித்யானந்தாவுக்கு கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பாலியல் புகாரில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு, நித்யானந்தா அதிரடியாகக் கைது செய்யப்பட்டார். பின்னர், அவர் ஜாமீனில் வெளியே வந்தார்.
இதனையடுத்து, இது தொடர்பான வழக்கு விசாரணையில் அவர் ஆஜராகவில்லை. இதனைத்தொடர்ந்து, அவர் வெளிநாடு தப்பிச் சென்றார். மேலும், அவர் 'கைலாசா நாட்டை' உருவாக்கி உள்ளதாகவும் ஆன்லைன் மூலம் அவர் தெரிவித்தார்.
இதனிடையே, பாலியல் வழக்கில், நித்தியானந்தாவுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக்கோரி, அவருடைய முன்னாள் சீடர் லெனின், கர்நாடக உயர்நீதிமன்றத்தில் கடந்த மாதம் புதிதாக வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு, கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி.குன்ஹா முன்பு, விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கை விசாரித்த நீதிபதி, ஒரு வாரக் காலத்திற்குள் இது தொடர்பாக நித்தியானந்தா பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார்.
இதனையடுத்து, நித்தியானந்தா எங்கு இருக்கிறார் என தெரியவில்லை என்றும், அவர் வெளிநாடுகளில் பதுங்கி இருக்கலாம் என்றும் போலீசார் தரப்பில், நீதிமன்றத்தில் கூறப்பட்டதாகத் தெரிகிறது.
இதனையடுத்து, நித்தியானந்தாவுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்வதாகக் கர்நாடக உயர்நீதிமன்றம் அதிரடியாக அறிவித்தது.
இந்நிலையில், ராம்நகர் நீதிமன்றத்தில் நித்தியானந்தா மீதான பாலியல் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நித்தியானந்தாவின் ஜாமீன் மனுவை உயர்நீதிமன்றம் ரத்து செய்ததை ராம்நகர் நீதிமன்றம் உறுதி செய்தது. மேலும், நித்தியானந்தாவை உடனே கைது செய்யவும் ராம்நகர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது.
இதனால், ரெட் கார்னர் நோட்டீஸ் மூலம் நித்தியானந்தாவை கைது செய்ய, கர்நாடகா போலீசார் நடவடிக்கை எடுக்ககூடும் என்றும் கூறப்படுகிறது. இதன் காரணமாக, நித்தியானந்தா எந்நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.