திருச்சி பொன்மலை ரயில்வே பணி நியமனத்தில் தமிழ் நாட்டினர் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், அங்குத் தொடர்ந்து பல்வேறு தமிழ் அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவது சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி பொன்மலையில் மத்திய அரசின் தென்னக ரயில் நிலையத்தின் கீழ் இயங்கும் ரயில்வே பணிமனை (Golden Rock Central Railway Workshop - GOW) செயல்பட்டு வருகிறது. இதில், சுமார் 6 ஆயிரம் பேர் பணியாற்றி வருகின்றனர். அங்கு, கடந்த 3 ஆம் தேதி காலை, பொன்மலை பணிமனை நிர்வாகத்தின் திருமண மண்டபத்தில் திடீரென நூற்றுக்கணக்கான வட மாநிலத்தவர்கள் தங்கள் கைகளில் சான்றிதழ்களோடு, எவ்வித தனிமனித இடைவெளியும் இன்றி, அங்க வந்து குவிந்தனர்.
இது தொடர்பாக அவர்களிடம் கேட்டபோது, திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் 581 தொழில் நுட்ப பணியிடங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நியமனம் தொடர்பான நேர்காணல் நடைபெற்று வருவது தெரிய வந்தது.
இதில், தமிழகத்தைச் சேர்ந்த வெறும் 12 பேர் மட்டுமே பணி நியமனம் பெற்று உள்ளனர். அதே நேரத்தில், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 163 பேரும், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த 115 பேர் என மொத்தம் வட மாநிலத்தவர்கள் 569 பேருக்கு இங்கு பணி ஆணை வழங்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
குறிப்பாக, இந்த பணி நியமனத்தில், தமிழக இளைஞர்கள் திட்டமிட்டே புறக்கணிக்கப்படுகின்றனர் என்கிற சர்ச்சை மீண்டும் அங்கு எழுந்துள்ளது. இதனால், அங்கு வட மாநிலத்தவர்களே அதிகளவில் பணிக்குத் தேர்வாகி உள்ளனர்.
தமிழகத்தில் உள்ள மத்திய அரசு பணியில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதைக் கண்டித்து, தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில், தமிழகமெங்கும் “இனம் காக்க இருமனைப் போராட்டம்” என்ற தலைப்பில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
இந்த போராட்டத்தில், “தமிழ்நாடு அரசு, வெளி மாநிலத்தவரை அழைக்கக் கூடாது, தமிழர்களுக்கு வேலை வழங்க தனி வாரியம் அமைக்க வேண்டும், மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய கல்விக் கொள்கையைக் கைவிட வேண்டும்” உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்த்தேசியப் பேரியக்கம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன் தொடர்ச்சியாக, இதே குற்றச்சாட்டை முன்வைத்து வேலை நிராகரிக்கப்பட்ட இளைஞர்கள் கூட்டமைப்பு மற்றும் ரயில்வே அப்ரண்டிஸ் சங்கத்தினர், அரசியல் கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர், திருச்சி பொன்மலை ரயில்வே அலுவலகம் முன்பாக அடுத்தடுத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், வரும் 17 ஆம் தேதி தொடர் காத்திருப்பு போராட்டத்தையும் அவர்கள் அறிவித்துள்ளனர். இது ஒரு புறமிருக்க, பொன்மலை பணிமனையில் ஏற்கனவே பணியில் உள்ள வட மாநிலத்தவர்கள் விருப்பத்தின் பேரில் படிப்படியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். இந்த இடங்களில் புதிதாக வரும் வட மாநிலத்தவர்களைக் கொண்டு நிரப்பத் திட்டமிட்டு, தமிழ்நாட்டினருக்கான வாய்ப்பை குறைத்து வருவதாக புதிய குற்றச்சாட்டும் தற்போது புதிதாக எழுந்துள்ளது.
இதனால், ரயில்வே தேர்வுகளை வெளிப்படையாக நடத்த வேண்டும் என்றும், பாரபட்சமின்றி தேர்வு செய்ய வேண்டும் என்றும், அப்ரண்டிஸ் பயிற்சி முடித்துக் காத்திருக்கும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு வேலை வழங்க வேண்டும் என்றும், தமிழ்நாட்டில் உள்ள ரயில்வே பணியிடங்களில் 90 சதவீத இடங்கள் தமிழக இளைஞர்களுக்கு வழங்க சட்டம் இயற்ற வேண்டும் என்றும், அகில இந்திய ரயில்வே அப்ரண்டீஸ் சங்கத்தினர் வலியுறுத்தி உள்ளனர்.
அத்துடன், “இந்த கொரோனா நேரத்தில் வெளி மாநிலத்தினர் இத்தனை பேரும் இபாஸ் பெற்றுத்தான் திருச்சிக்கு வந்தனரா? அவர்களுக்கு இபாஸ் எப்படி கிடைத்தது?” என்றும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
இதனிடையே, “கடந்த 2019 ஏப்ரல் மாதம், தமிழ் நாட்டிலுள்ள ரயில்வே பணியிடங்களில் பணியாற்றப் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 1,765 பழகுநர்களில் (Act Apprentice) சற்றொப்ப 1,600 பேர் வட மாநிலத்தவர் என்றும், அவர்களில் 300 பேர் இதே பொன்மலை ரயில்வேயில் பணியமர்த்தப்பட்டனர் என்றும், அதில் ஒரு தமிழர் கூட இல்லை” என்று ஏற்கனவே, தமிழ்த்தேசியப் பேரியக்கம் குற்றம்சாட்டி இருந்தது. தற்போது, அதே போன்று மீண்டும் ஒரு சம்பவம் நடந்துள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.