தெற்கு வங்கக்கடலில் அதிஉச்ச தீவிர புயலாக மாறிய ஆம்பன் புயலால், 180 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளிக் காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தெற்கு வங்க கடல் மற்றும் அதனை ஓடியுள்ள பகுதிகளில் நிலை கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, ஆம்பன் புயல் உருவானது.
இதனால், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நள்ளிரவில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. தமிழகத்தின் பல பகுதிகளில் தற்போது பலத்த காற்று வீசி வருகிறது.
அதன்படி ராமேஸ்வரம், தங்கச்சிமடம், பாம்பன், மண்டபம் துறைமுக பகுதிகளில் நள்ளிரவில் சூறைக்காற்று வீசியதால் நாட்டுப்படகுகள் மற்றும் விசைப்படகுகள் சுமார் 30 க்கும் மேற்பட்டவை சேதமடைந்தன. சூறைக்காற்றால், மின்கம்பங்கள் சேதமடைந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மக்கள் அவதிக்குள்ளானர்.
தஞ்சை மாவட்டம் திருவையாறு, ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, புனல்வாசல், வல்லம், செங்கிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. சில இடங்களில் மரங்களும் வேரோடு சாய்ந்தது.
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல், இலுப்பூர், முக்கணமலைப்பட்டி, பரம்பூர், சித்தன்னவாசல் உட்பட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
திருச்சி மாவட்டம் முசிறி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்தது. இதனால், அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பகுதியில் கனமழை பெய்தது. வெப்பத்தின் தாக்கம் அதிகரித்திருந்த நிலையில், திடீரென பெய்த மழையால் அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதனிடையே, ஆம்பன் புயலானது தெற்கு வங்கக்கடலில் அதிஉச்ச உயர் தீவிர புயலாக தற்போது மாறியுள்ளது. சென்னைக்குக் கிழக்கே சுமார் 650 கிலோ மீட்டர் தொலைவில் புயல் தற்போது மையம் கொண்டுள்ளது.
இந்த புயல் வடகிழக்கு திசை நோக்கி நகரும் என்றும், மணிக்கு 180 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என்றும், இதனால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.