அதிக அளவிலான கொரோனா பாதிப்பால், சீனாவை முந்தி உலக வல்லரசான அமெரிக்கா முதலிடத்திற்கு வந்துள்ளது, உலக நாடுகளை கடும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
உலக நாடுகளில் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது கொரோனா வைரஸ். இந்த கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் பல வல்லரசு நாடுகள் கடுமையாக திணறி வருகின்றன.
உலகம் முழுவதும் சுமார் 200 நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவி உள்ள நிலையில், சுமார் 5 லட்சத்து 32 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகம் முழுவதும் இந்த கொரோனாவால் இதுவரை சுமார் 24 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக, சீனாவிலிருந்து மற்ற உலக நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவியிருந்தாலும், பல ஆயிரம் பேர் அங்குப் பாதிக்கப்பட்டு இருந்தனர். தற்போது
சீனாவில் கொரோனா முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில், சீனாவை விட அமெரிக்காவில் உள்ள மக்களை அதிக எண்ணிக்கையில் கொரோனா கடுமையாகப் பாதித்துள்ளது. இதனால், கொரோனா பாதிப்பால், சீனாவை முந்தி உலக வல்லரசான அமெரிக்கா, முதலிடத்திற்கு வந்துள்ளது.
கொரோனா வைரஸ் முதன் முதலாகத் தோன்றிய சீனாவில், தற்போது வரை 81 ஆயிரத்து 782 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், கொரோனவுக்கு சீனாவில் இதுவரை 3 ஆயிரத்து 287 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவைக் காட்டிலும் ஐரோப்பிய நாடான இத்தாலியில், 8 ஆயிரத்து 215 பேர் கொரோனாவால் அங்கு உயிரிழந்துள்ளனர். இத்தாலியில் தற்போது வரை 80 அயிரத்து 600 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல், அமெரிக்காவில் கடந்த சில நாட்களாக மின்னல் வேகத்தில் பரவி வந்த கொரோனா வைரஸ், அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் சுமார் 13 ஆயிரத்து 700 பேரை தாக்கி உள்ளது. இதன் காரணமாக, அமெரிக்காவில், ஒட்டுமொத்தமாக இதுவரை 85,653 பேருக்கு கொரோனா தொற்று பரவி இருப்பது தெரியவந்துள்ளது.
இதன்படி, உலகிலேயே கொரோனாவால் அதிகம் பாதிப்புக்கு உள்ளான நாடாக அமெரிக்கா தற்போது மாறியுள்ளது. ஆனாலும், சீனா மற்றும் இத்தாலியை ஒப்பிடும் போது, அமெரிக்காவில் உயிரிழப்பு குறைவாக உள்ளது என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.
இதனிடையே, கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தொடர்பாக, சீன அதிபருடன் அமெரிக்கா அதிபர் டிரம்ப் இன்று முக்கிய ஆலோசனை மேற்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.