தமிழக சட்டசபை பொது தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்களே உள்ளது. தேர்தலை சந்திக்க அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. அ.தி.மு.க., தி.மு.க. உள்ளிட்ட அனைத்து கட்சிகளிலும் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு தேர்தலை சந்திப்பதற்கான மற்ற பணிகளும் தொடங்கியுள்ளனர். கொரோனா பாதிப்பு காரணமாக இந்த சட்டசபை தேர்தலில் பிரசாரம் வேறு விதமாக இருக்கும் என்பதால் பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
அ.தி.மு.க.வில் முதல்வர் வேட்பாளரை தேர்வு செய்வது, 11 பேர் கொண்ட வழிகாட்டு குழுவை அமைப்பது தொடர்பாக பிரச்சனைகள் இருந்து வந்தன. இந்த பிரச்சனைக்கு தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு முதல்- அமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். அதேபோல் அ.தி.மு.க.வை வழிநடத்த 11 பேர் கொண்ட வழிகாட்டு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, டி.ஜெயக்குமார், சி.வி.சண்முகம், ஆர்.காமராஜ் மற்றும் ஜே.சி.டி.பிரபாகர், மானோஜ்பாண்டியன், முன்னாள் அமைச்சர் ப.மோகன், இரா.கோபால கிருஷ்ணன், மாணிக்கம் எம்.எல்.ஏ. ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இதற்கிடையில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்பது இன்று தெரிந்துவிடும் என்று கூறப்பட்டது. அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் ஓ.பன்னீர் செல்வம், பழனிசாமி ஆகிய இருவரும் சேர்ந்து செய்தியாளர்களைச் சந்திப்பதாக தகவல் வெளியானது. நேற்றிலிருந்தே ஓபிஎஸ், இபிஎஸ் வீடுகளில் அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வந்தனர். காலை 9 மணிக்கு மேல் அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு ஒருவர் பின் ஒருவராக தலைமைக் கழகத்துக்கு சென்றனர்.
யார் முதல்வர் வேட்பாளர் என அதிமுக தொண்டர்களும் மிகவும் உற்சாகமாக எதிர்பார்த்து காத்து நின்றனர். இருவரின் ஆதரவாளர்களும் தலைமைக் கழகத்தில் குவிந்து பதாகைகள் ஏந்தியும், உருவப்படங்களை உடலில் வரைந்தும் தங்கள் ஆதரவை காட்டினர்.
அ.தி.மு.க.வில் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதால் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். தமிழகம் முழுவதும் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் ஆகியோரின் ஒற்றுமையை விளக்கும் விதமாக இருவரின் படங்களுடன் போஸ்டர் ஒட்டி வருகிறார்கள்.
அ.தி.மு.க.வில் அமைக்கப்பட்டுள்ள வழிகாட்டு குழுவுக்கு என்னென்ன அதிகாரங்கள் வழங்குவது என்பது பற்றியும் முடிவு செய்யப்பட்டுள்ளது. வேட்பாளர்கள் நியமனம், கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை, பிரசாரம் ஆகிய பணிகளை இந்த வழிகாட்டுதல் குழு மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. இறுதி முடிவுகளை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் எடுப்பார்கள்.
11 பேர் கொண்ட வழிகாட்டு குழுவுக்கு அங்கீகாரம் கொடுக்க மூத்த தலைவர்கள் முடிவு செய்துள்ளனர். ஆனால் பொதுக்குழு விதியை உருவாக்கி தீர்மானம் கொண்டு வந்தால் மட்டுமே அங்கீகாரம் கொடுக்க முடியும்.
எனவே இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அ.தி.மு.க. பொதுக்குழுவை வருகிற டிசம்பர் மாதம் முதல் வாரம் அல்லது 2-வது வாரம் கூட்ட முடிவுசெய்யப்பட்டுள்ளது. இந்த பொதுக்குழுவில் 4 ஆயிரம் உறுப்பினர்கள் கலந்துகொள்கிறார்கள். பொதுக்குழு கூட்டத்தில் 11 பேர் கொண்ட வழிகாட்டு குழுவுக்கு அதிகாரம் வழங்கு வதற்காக சட்ட விதிகளை திருத்தி தீர்மானம் கொண்டு வரப்படுகிறது. அதன்பிறகே இந்த வழிகாட்டு குழு அதிகாரம் பெற்ற குழுவாக மாறும்.
சரி இந்த 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழு அமைத்ததில் ஓ.பன்னீர்செல்வம் வெற்றி பெற்றிருக்கிறார் என்று சிலர் சொன்னாலும், இந்தக் குழுவில் பலம் பொருந்தியவர்களாக எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர்கள் 6 பேர் உள்ளனர். இவர்கள் அனைவருமே தற்போதைய ஆட்சியின் அமைச்சர்களாக உள்ளனர். ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக ஒரு அமைச்சர் கூட இந்த பட்டியலில் இல்லை என்பது அவர் எந்த அளவுக்குக் கட்சியில், ஆட்சியில் பலவீனமாக உள்ளார் என்பதைக் கூறும்.