அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி உள்பட 17 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ஊழல் வழக்குப் பதிவு செய்துள்ள நிலையில், அவர்களுக்கு
சொந்தமான 53 இடங்களில் லஞ்சஒழிப்பு துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடியாக இன்று சோதனை நடத்தி வருகின்றனர். அவர், அதிமுகவின்
கடந்த கால ஆட்சியின் போது அமைச்சராக இருந்த நேரத்தில், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் இந்த சோதனையை
நடத்தி வருவதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதன் படி, கோவை குனியமுத்தூரில் உள்ள எஸ்.பி. வேலுமணியின் வீட்டில் 10 க்கும் மேற்பட்ட அதிகாரிகள், காலை 6 மணி முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக, சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமான நண்பர் ஒருவரின் வீட்டிலும், காலை முதலே
சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதே போல், முன்னாள் அமைச்சர் வேலுமணியின் சகோதரர் அன்பரசன் மற்றும் அவர் சம்மந்தப்பட்ட நிறுவனங்கள் உள்பட 17 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை
போலீசார் ஊழல் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
குறிப்பாக, முன்னாள் அமைச்சர் வேலுமணி மற்றும் அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு சொந்தமான மொத்தம் 53 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர்
சோதனை மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்த வகையில் சென்னை, கோயம்புத்தூர், திண்டுக்கல் மாவட்டங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.
முக்கியமாக, எஸ்.பி. வேலுமணி உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தபோது சாலை அமைத்தல், மேம்பாலங்கள் கட்டுதல் உள்ளிட்ட பணிகளில் முறைகேடு
செய்ததாகவும், அவருக்கு வேண்டப்பட்டவர்களுக்கு டெண்டர் ஒதுக்கியதாகவும் எழுந்த புகார்களின் அடிப்படையில், இந்தச் சோதனை நடைபெறுகிறது.
அத்துடன், சென்னை எம்எல்ஏ விடுதியில் உள்ள எஸ்.பி. வேலுமணி அறையிலும் இன்று காலை சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வீடு உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தி வரும் நிலையில்,
அதிமுகவினர் நூற்றுக் கணக்கானோர் இந்த சோதனையை கண்டித்து, போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அதன் படி, வடவள்ளியில், அதிமுக பிரமுகர் சந்திரசேகர் வீட்டிலும் சோதனை நடத்தி வரும் நிலையில், சந்திரசேகர் வீட்டின் முன்பு அதிமுக தொண்டர்கள் திரண்டு
போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மேலும், கோவை குனியமுத்தூரில் முன்னாள் அமைச்சர் வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனை நடப்பதை கண்டித்து அங்கே திரண்ட நூற்றுக் கணக்கானோர்
போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு, உணவு பொட்டலங்கள், டீ உள்ளிட்டவை விநியோகிக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து, தொண்டர்கள் வீட்டின் வாசலில்
அமர்ந்தபடி தொடர்ந்து, போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதனிடையே, ஏற்கெனவே அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடந்த நிலையில், தற்போது எஸ்.பி. வேலுமணி வீட்டிலும்
சோதனை நடத்தப்பட்டு வருவது அதிமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.