காற்றாலை மோசடி வழக்கில் நடிகை சரிதா நாயருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பிரபல மலையாள நடிகையாகத் திகழ்ந்த நடிகை சரிதா நாயர்,கேரள மாநிலம் கோட்டயம் பகுதியில் தனது கணவருடன் வசித்து வந்தார்.
நடிகை சரிதா நாயரும், அவரது கணவர் பிஜு ராதாகிருஷ்ணனும் சேர்ந்து, கோவை வடவள்ளியில் செயல்பட்டு வரும் நிறுவனம் மூலமாக, காற்றாலை உபகரணங்களை வாங்கி விற்பனை செய்து வந்தனர்.
மேலும், காற்றாலை அமைத்துத் தருவதாகக் கூறி, கோவையைச் சேர்ந்த தொழிலதிபர் தியாகராஜன் மற்றும் சில தொண்டு நிறுவனத் தலைவர்களிடம் ஏமாற்றி, பல லட்சம் ரூபாய் வரை மோசடி செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பாக நடிகை சரிதா நாயர் மீதும், அவரது கணவர் பிஜு ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது மேலாளர் ரவி ஆகிய 3 பேரும் மீதும், கோவை குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து, கோவை குற்றவியல் நீதிமன்றத்தில் இது தொடர்பான விசாரணை நடைபெற்று வந்தது.
இந்நிலையில், இந்த வழக்கின் அனைத்து தரப்பு சாட்சிகளும் விசாரிக்கப்பட்டன. இதில் நடிகை சரிதா நாயர், அவரது கணவர் பிஜு ராதாகிருஷ்ணன், ரவி ஆகியோர் குற்றவாளிகள் என்பது உறுதி செய்யப்பட்டது.
அதன்படி இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான சரிதா நாயருக்கு அதிக பட்சமாக 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். இதனால், நீதிமன்ற வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.