யூடியூர் கிஷோர் கே ஸ்வாமி மீது, நடிகை ரோகிணி காவல் ஆணையர் அலுவலகத்தில் இணையம் வாயிலாகப் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
அரசியல் பெருந் தலைவர்கள் மீது அவதூறான கருத்துகளைப் பதிவிட்டதாக யூடியூபர் கிஷோர் கே.சாமி கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிரடியாகக் கைது செய்யப்பட்டார்.
அதாவது, தந்தை பெரியார், முன்னாள் முதல்வர்களான அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, தற்போதைய தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட திராவிடம் சார்ந்த அரசியல் தலைவர்கள் குறித்தும், பத்திரிகையாளர்கள் குறித்தும் சமூக வலைத்தளங்களில் தவறாகவும், அவதூறு பரப்பும் வகையிலும் கருத்துகளைப் பதிவிட்டதாக யூடியூபர் கிஷோர் கே.சாமி மீது, காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக தொழில் நுட்பப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் ரவிச்சந்திரன், கடந்த ஜூன் 10 ஆம் தேதி புகார் அளித்தார்.
கிஷோர் கே சாமி முன்னாள் முதல்வர்கள் குறித்தும், பெண் பத்திரிக்கையாளர் குறித்தும் அவதூறு பரப்பும் வகையில் கருத்துகளைத் தொடர்ந்து பதிவிட்டதாக போலீசாரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டு, தற்போது சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்.
அவரது கைதைப் பல்வேறு தரப்பினரும் வரவேற்றுப் பேசிவரும் சூழலில், அவர் மீது விசிக துணை பொதுச்செயலாளர் வன்னியரசு மற்றும் நடிகை ரோகினி ஆகியோர் மேலும் கிஷோர்.கே.சாமி மீது புகார் அடுத்தடுத்து புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
அதன் படி, சினிமா நடிகையும், மறைந்த நடிகர் ரகுவரனின் மனைவியான ரோகிணி, ஆன்லைன் வாயிலாக யூடியூர் கிஷோர் கே.சாமி மீது, பகிரங்கமான புகார் ஒன்றை அளித்து உள்ளார்.
அந்தப் புகாரில், “கடந்த 2014 ஆம் ஆண்டு கிஷோர் கே சாமி, எனது ஃபேஸ்புக் வலைத்தள பக்கத்தில் மறைந்த நடிகர் ரகுவரன் மற்றும் என்னை பற்றியும் மிகவும் இழிவுபடுத்தும் வகையில் கருத்தைப் பதிவிட்டிருந்தார்” என்று குறிப்பிட்டு உள்ளார்.
“இந்த தவறான கருத்துகளால் எனக்கு மன உளைச்சல் ஏற்பட்டது என்றும், இதே போல் பாஜக மூத்த தலைவர்களான பொன் ராதாகிருஷ்ணன், இல.கணேசன், வானதி ஸ்ரீனிவாசன், தமிழிசை சவுந்திரராஜன் ஆகியோர் குறித்தும் அவர் அவதூறு பரப்பும் வகையில் தொடர்ச்சியாகக் கருத்துகளைப் பதிவிட்டிருந்தார்” என்றும், அவர் பகிரங்கமாகு குற்றம்சாட்டி உள்ளார்.
“இதன் காரணமாக, கிஷோர் கே சாமி மீது, தகுந்த நடவடிக்கை எடுத்து, அவரை தண்டிக்க வேண்டும்” என்றும், நடிகை ரோகிணி தனது புகாரில் வலியுறுத்தி உள்ளார்.
தற்போது, இந்த புகார் குறித்து தமிழக காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக, நடிகை ரோகிணி அளித்த இந்த வழக்கிலும் காவல் துறையினர் கிஷோர் கே சாமி மீது? வழக்குப் பதிவு செய்வதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும் காவல் துறை தரப்பில் கூறப்படுவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.