மறைந்த நடிகர் விவேக்கின் உடல் 78 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
நெஞ்சு வலி மற்றும் மூச்சுத்திணறலால் காரணமாக பாதிக்கப்பட்ட நடிகர் விவேக், சென்னை வடபழனி சிம்ஸ் மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், எக்மோ கருவி பொருத்தப்பட்டு தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் தான், இன்று அதிகாலை 4.35 மணி அளவில் சிகிச்சை பலனின்றி நடிகர் விவேக் உயிரிழந்தார்.
தன்னுடைய 59 வயதில் உயிரிழந்த நடிகர் விவேக்கின் உடலானது, சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் பொது மக்கள் அஞ்சலிக்காக காலை முதல் வைக்கப்பட்டது. இதனால், தமிழ் திரையுலகினர் மற்றும் அரசியல் தலைவர்கள், பல்வேறு துறைகளின் பிரபலங்கள் என்று பலரும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வந்தனர்.
அப்போது, “காவல் துறை மரியாதையுடன் நடிகர் விவேக் உடல் அடக்கம் செய்ய” தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியது.
அதன் தொடர்ச்சியாக, “நடிகர் விவேக்கின் உடல் காவல் துறை மரியாதையுடம் நல்லடக்கம் செய்யப்படும்” என்று, தமிழக அரசு அறிவித்தது.
அதன் படி, “78 குண்டுகள் முழங்க நடிகர் விவேக்கின் உடலுக்கு தமிழக காவல் துறை சார்பில் மரியாதை” செலுத்தப்பட உள்ளது.
இப்படியான நிலையில், நடிகர் விவேக்கின் குடும்ப முறைப்படி நடக்க உள்ள சடங்குகளானது உடனடியாக செய்யப்பட்டு, அவரது உடல் காவல் துறையினர் வசம் ஒப்படைக்கப்பட்டது. இதனையடுத்து, பொது மக்கள் அஞ்சலிக்கு தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், விவேக் உடல் சென்னை விருகம்பாக்கம் மேட்டுக்குப்பம் மயானத்தில் மாலை 5 மணிக்கு தகனம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
அதன் படி, சென்னை விருகம்பாக்கம் வீட்டில் இருந்து நடிகர் விவேக்கின் இறுதி ஊர்வலம் அரசு மரியாதையுடன் தற்போது தொடங்கி உள்ளது. இந்த இறுதி ஊர்வலத்தில் திரையுலக பிரபலங்கள், பொது மக்கள் என்று, ஏராளமானோர் பங்கேற்று உள்ளனர். வாகனங்கள் திரையுலக பிரபலங்கள் மற்றும் அவரது சொந்த பந்தங்கள், ரசிகர்கள் என்று வரிசையாக வந்துகொண்டிருக்க, வழி நெடுகிலும் மலர்கள் தூவப்பட்டு தற்போது இறுதி ஊர்வலமாக விவேக் உடல் எடுத்துச் செல்லப்பட்டன.
அப்போது, நடிகர் விவேக்கின் இறுதி ஊர்வலத்தில் மரக்கன்றுகளை ஏந்திச் சென்று ரசிகர்கள் அஞ்சலி செலுத்தினர்.
இதனையடுத்து, நடிகர் விவேக்கின் உடலுக்கு மரியாதை செலுத்தும் வகையில், தமிழக அரசு முறைப்படி “வான் நோக்கி 78 குண்டுகள் முழங்க துப்பாக்கியால் சுடப்பட்டு மரியாதை” செலுத்தப்பட்டது. இதனையடுத்து, நடிகர் விவேக்கின் உடல் முறைப்படி தகனம் செய்யப்பட்டது. இதனால், அவரது குடும்பத்தினரும், உறவினரும், ரசிகர்கள் மற்றும் பொது மக்கள் பலரும் அழுதுகொண்டே கண்ணீருடன் திரும்பிக்கொண்டு இருக்கிறார்கள்.