“சாதி, மதத்திற்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு” என்று, நடிகர் விஜய் சேதுபதி அதிரடியாக தெரிவித்து உள்ளார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் மதியம் ஒரு மணி நிலவரப்படி 39.61 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருக்கின்றன. இதில், குறிப்பாக, சென்னையில் மட்டும் மதியம் ஒரு மணி நிலவரப்படி 37.16 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.

தமிழகத்தில் அதிகபட்சமாக விருதுநகர் மாவட்டத்தில் 41.79 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்று உள்ளது. குறைந்த பட்சமாக திருநெல்வேலி மாவட்டத்தில் 29.31 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன.

அதே போல், இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி தமிழ் திரை பிரபலங்கள் பலரும் தங்கள் தொகுதிகளில் வாக்கை செலுத்தி வருகின்றனர்.

அதன் படி,

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர் அர்ஜூன் வாக்களித்தார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்கு செலுத்தினார் நடிகர் சத்யராஜ்.

சென்னை ஆழ்வார்பேட்டை டிடிகே சாலையில் உள்ள புனித பிரான்சிஸ் சேவியர் நடுநிலைப்பள்ளியில் நடிகர் சித்தார்த் வாக்களித்தார்.

சென்னை டி.டி.கே சாலையில் உள்ள புனித பிரான்சிஸ் சேவியர் நடுநிலை பள்ளியில் நடிகர் ஜெயம் ரவி வாக்களித்தார்.

நடிகை திரிஷா சென்னை டிடிகே சாலையில் உள்ள புனித பிரான்சிஸ் சேவியர் நடுநிலைப் பள்ளியில் வாக்களித்தார்.

சென்னை தியாகராய நகரில் உள்ள வாக்குச் சாவடியில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தனது வாக்கினை பதிவு செய்தார்.

அதே போல், கொரோனாவால் பாதிக்கப்பட்ட, இயக்குநர் லோகேஷ் கனகராஜ், அதிலிருந்து மீண்டு வந்து, இன்று வாக்களித்திருக்கிறார்.

மேலும், நடிகர் அருண் விஜய் தனது குடும்பத்தினருடன் தன்னுடைய வாக்கை செலுத்தினார்.

அதே போல், சென்னை : பெசன்ட் நகரில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர் விக்ரம் வாக்களித்தார். வாக்குப்பதிவு இயந்திரம் கோளாறு காரணமாக காத்திருந்த விக்ரம், சரிசெய்யப்பட்ட பின்பு வாக்களித்தார்.

மதுரை புதுத்தாமரைப் பட்டியில் வாக்கு அளித்தார் இயக்குனர் சசிக்குமார்.

சென்னை அருகில் உள்ள ஸ்ரீபெரும்புதூரில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்கு செலுத்தினார் நடிகர் யோகிபாபு.

சென்னை டிரஸ்ட்புரம் வாக்குச் சாவடியில் வாக்கு செலுத்தினார் கவிஞர் வைரமுத்து.

குறிப்பாக, நடிகர் விஜய் சேதுபதி கோடம்பாக்கத்தில் உள்ள அரசுப் பள்ளியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.

இதனையடுத்து, அங்கு செய்தியாளர்களை சந்தித்த நடிகர் விஜய் சேதுபதி, “நான் சாதி மதங்களுக்கு அப்பாற்பட்டவன்” என்று, குறிப்பிட்டார்.

அத்துடன், “சாதி, மதத்திற்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு” என்றும், நடிகர் விஜய் சேதுபதி அதிரடியாக தெரிவித்தார்.

அதே போல், “கடந்த 2019 ஆம் ஆண்டு தனியார் கல்லூரி விழா ஒன்றில் பேசிய நடிகர் விஜய் சேதுபதி, “வாக்கு செலுத்துவது மிகவும் முக்கியம். எப்போதுமே நமது ஊருக்கு ஒரு பிரச்னை, கல்லூரிக்கு ஒரு பிரச்னை, நம் மாநிலத்துக்கு ஒரு பிரச்னை என்று அழைப்பவர்களுடன் சேருங்கள். நம் சாதிக்கு ஒரு பிரச்னை, மதத்துக்கு ஒரு பிரச்னை என்று பேசுபவர்களுடன் சேராதீர்கள். அப்படி சொல்பவர்கள் நம்மைத் தூண்டி விட்டு போலீஸ் பாதுகாப்புடன் வீட்டில் இருப்பார்கள். நாம் தான் சிக்கிக் கொள்வோம். புரிந்து கொள்ளுங்கள் என்று கூறியிருந்தார்” இந்த வீடியோ, தற்போது தீயாக பரவி வருகிறது.

இந்த வீடியோ குறித்தும் நடிகர் விஜய் சேதுபதியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த விஜய் சேதுபதி, “எனக்கு எப்போதும் அதே நிலைப்பாடுதான் என்றும், மனிதன் தான் எனக்கு முக்கியம்” என்றும் திட்டவட்டமாக கூறினார்.

அதேபோல், நடிகர் டி.ராஜேந்தர், நடிகர் பிரசன்னா, நடிகர் ஆர்.ஜே பாலாஜி, நடிகர் நாசர், நடிகர் சூரி, நடிகர் ஹரிஷ் கல்யாண், நடிகர் கருணாகரன், இயக்குநர் சுசீந்திரன், இயக்குநர் சீனு ராமசாமி, நடிகை சுகன்யா, நடிகை ரெஜினா, நடிகை ரித்விகா, தொகுப்பாளினி திவ்ய தர்ஷினி உள்ளிட்ட தமிழ் சினிமா பிரபலங்களும் வரசையில் நின்று வாக்களித்தனர்.

முன்னதாக, தமிழக திரை நட்சத்திரங்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித் உள்ளிட்ட பலரும் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றிய நிலையில், மிகவும் வித்தியாசமாக சைக்கிளில் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்து நடிகர் விஜய், பின்னர் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பியது குறிப்பிடத்தக்கது.