இந்து கோயில் பூஜைகளை கொச்சைப்படுத்தியதாக நடிகர் விஜய் சேதுபதி மீது, திருச்சி காவல் ஆணையர் அலுவலகத்தில் அகில இந்திய இந்து மகாசபா சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அகில இந்திய இந்து மகாசபா சார்பாக திருச்சி காவல் ஆணையர் அலுவலகத்தில் கொடுக்கப்பட்டுள்ள புகாரில், “நடிகர் விஜய் சேதுபதி, கடந்த மார்ச் மாதம் 17 ஆம் தேதி அன்று, தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில், இந்து கோயில்களின் தெய்வங்களுக்கு ஆகமவிதிப்படி நடைபெறும் அபிஷேகம் மற்றும் அலங்காரங்களை கொச்சைப்படுத்தும் விதமாகப் பேசியுள்ளதாக” குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
மேலும், “இந்து மதத்தினையும், அதன் வழிபாட்டு முறைகளையும், இந்துக்களின் நம்பிக்கையையும் இழிவுபடுத்தும் நோக்கத்துடன் பேசியுள்ளதாக” புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், “இந்து மதக் கோயில்களின் அபிஷேக, அலங்கார முறைகளைப் பற்றி கூற காரணம் என்ன?” என்றும், அதில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
குறிப்பாக, “நடிகர்கள் தங்களை விளம்பரப்படுத்திக்கொள்ள இந்து மதம் தான் கிடைத்ததா? என்றும், இப்படிப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் அந்த புகாரில், இந்து மகாசபா வலியுறுத்தி உள்ளது.