“வரும் 4 ஆம் தேதி முதல் கல்லூரி முதலாமாண்டு வகுப்புகள் தொடங்கப்படும்” என்று, கல்லூரிக் கல்வி இயக்ககம் அறிவித்து உள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவல் காரணமாக, கடந்த கல்வியாண்டு முதல் தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து வகையான கல்வி நிலையங்களும் அதிரடியாக மூடப்பட்டன.
இதனையடுத்து, கடந்த சில மாதங்களாக கொரோனா தாக்கம் சற்று குறைந்த காரணத்தால் ஆசிரியர்கள், பெற்றோர்கள், நிபுணர்கள் என்று, பலரிடமும் கருத்து கேட்டு, கல்லூரிகள் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் திறக்கப்பட்டன. அதாவது, கல்லூரியின் முதலாமாண்டு மாணவர்களை தவிர, மற்ற கல்லூரி மாணவர்களுக்கு கல்லூரிகள் திறக்கப்பட்டன.
அதன் தொடர்ச்சியாகவே, 9 ஆம் வகுப்பு முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன. தற்போது வரை, மாணவர்களுடன் சுழற்சி முறையில் வாரம் 6 நாட்கள் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
எனினும், “முகக்கவசம் அணிதல், ஆசிரியர்கள், 18 வயதுக்கு மேற்பட்ட மாணவர்கள் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும், தனிமனித இடைவெளியைப் பின்பற்ற வேண்டும்” உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன.
இந்த சூழலில், “தமிழகத்தில் கலை, அறிவியல் கல்லூரிகளுக்கான முதலாமாண்டு மாணவர்களுக்கான நேரடி வகுப்புகள் எப்போது தொடங்கப்படும்” என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்தது.
இந்த இந்நிலையில் தான், “வரும் 4 ஆம் தேதி முதல் கல்லூரி முதலாமாண்டு வகுப்புகள் தொடங்கப்படும்” என்று, கல்லூரிக் கல்வி இயக்ககம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
இது தொடர்பாக கல்லூரிக் கல்வி இயக்குநர் சி. பூரணசந்திரன் கல்லூரிக் கல்வி இணை இயக்குநர்கள், அனைத்து அரசு கல்லூரி முதல்வர்களுக்கு சுற்றறிக்கையை அனுப்பி உயுள்ளார்.
அந்த அறிவிப்பில், “2021- 2022 ஆம் கல்வி ஆண்டின் பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணாக்கர்களுக்கு வரும் 4 ஆம் தேதி முதல் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி வகுப்புகள் தொடங்கிட நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்துக் கொள்கிறேன்” என்று, குறிப்பிட்டு உள்ளார்.
“புதிதாகச் சேர்க்கப்பட்ட மாணாக்கர்களுக்கு புத்தொளிப் பயிற்சி வழங்க கல்லூரி முதல்வர்கள் உரிய ஏற்பாடுகள் செய்ய வேண்டும்” என்றும், அவர் கேட்டுக்கொண்டு உள்ளார்.
அத்துடன், “தங்களது மண்டலத்திற்கு உட்பட்ட அரசு உதவி பெறும் மற்றும் தனியார் சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு இது தொடர்பாக உரிய அறிவுரைகளை வழங்குமாறு தெரிவித்துக் கொள்கிறேன்” என்றும், அவர் கூறியுள்ளார்.
“தகுதியுள்ள அனைத்து மாணாக்கர்களும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள அறிவுறுத்துமாறும் கல்லூரி வளாகங்களில் முகக் கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்றும் சமூக இடைவெளியைத் தவறாது பின்பற்ற வேண்டும் என்பதையும் உறுதிப்படுத்துமாறு கல்லூரி முதல்வர்களைக் கேட்டுக் கொள்கிறேன்” என்றும், கல்லூரிக் கல்வி இயக்குநர் அறிவிப்பில் தெரிவித்து உள்ளார்.