நடிகர் விவேக் மரணம் தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த நடிகர் மன்சூரலிகான் மீது, சென்னை மாநகராட்சி சார்பில் போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு அளிக்கப்பட்ட நிலையில், முன்ஜாமீன் கேட்டு நடிகர் மன்சூர் அலிகான் மனு தாக்கல் செய்து உள்ளார்.
நடிகர் விவேக் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா ஊசி செலுத்திக்கொண்டார். இதனையடுத்து, மறு நாள் காலையில் வீட்டில் இருந்த விவேக்கிற்கு திடீரென்று நெஞ்சுவலியும், மூச்சுத்திணறலும் ஏற்பட்டு, வடபழனி சிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது, அவருக்கு இதய செயல்பாடு குறைந்த நிலையில், இதயத்தை முழுமையாக செயல்பட வைக்க, அவருக்கு எக்மோ கருவி பொருத்தி இன்னும் தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இதனால், விவேக் பாதிக்கப்பட்டதற்கு, கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டது தான் காரணம் என்று எதிர்மறையான கருத்துக்கள் முன் வைக்கப்பட்டன.
இதனால், கடும் அதிர்ச்சியடைந்த தமிழ்நாடு சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன், அன்று மாலையே செய்தியாளர்களைச் சந்தித்து, “நடிகர் விவேக்கிற்கு ஏற்பட்ட மாரடைப்புக்கு கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டது காரணமல்ல” என்று, விளக்கம் அளித்தார்.
ஆனால், தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த நடிகர் விவேக், மறுநாள் அதிகாலை 4.35 மணி அளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால், “நடிகர் விவேக் இறப்புக்கும் முதல் நாள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட விசயம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்தது.
அப்போது, நடிகர் விவேக் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த நடிகர் மன்சூர் அலிகான், செய்தியாளர்களைச் சந்தித்த, “கொரோனா தடுப்பூசி போட்டதால்தான், விவேக் மாரடைப்பால் பாதிக்கப்பட்டார்” என்று, சர்ச்சைக்குரிய வகையில் மிகவும் ஆவேசமாகப் பேசினார்.
இதனால், கொரோனா தடுப்பூசி தொடர்பாக எதிர்மறையான கருத்துக்கள் இணையத்தில் பெரும் வைரலானது.
இதனையடுத்து, இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த சென்னை மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ், “விவேக் இறப்புக்கும் கொரோனா தடுப்பூசி போட்டதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என்று, விளக்கம் அளித்தார்.
அதே போல், “அரசின் மீதும், தடுப்பூசி மீதும் நம்பிக்கை அவசியம் வேண்டும்” என்று, சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் வலியுறுத்தினார்.
அதன் தொடர்ச்சியாக, விவேக் மாரடைப்பால் பாதிக்கப்பட்டது பற்றி சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த நடிகர் மன்சூரலிகான் மீது, சென்னை போலீஸ் கமிஷனரிடம், சென்னை மாநகராட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த புகார் மனு குறித்து உரிய நடவடிக்கை எடுப்பது தொடர்பாக சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி வருவதாகவும், அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், போலீஸ் தரப்பில் கூறப்பட்டு இருந்தது.
எனினும், “என்னை ஜெயிலுக்கு அனுப்பினாலும் கவலை இல்லை” என்றும், நடிகர் மன்சூரலிகான் அவர் அளித்த பேட்டியின் போது தெரிவித்ததாகவும் செய்திகள் வெளியானது.
இந்த நிலையில் தான், நடிகர் மன்சூர் அலிகான் முன்ஜாமீன் கேட்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில் தற்போது மனு தாக்கல் செய்து உள்ளார். அவரது மனு விரைவில் விசாரிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.