சென்னையில் நேற்று ஒரே நாளில் மட்டும் 8007 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில், சென்னையில் கிட்டதட்ட 9237 தெருக்களில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக, தமிழ்நாடு முழுவதும் 600 க்கும் அதிகமான இடங்களிலும், சென்னையில் 160 இடங்களிலும் இன்று பூஸ்டர் டோஸ் தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது.

தமிழ்நாட்டில் கொரோனா தாக்கம் தற்போது மீண்டும் அதிகரித்த வண்ணம் உள்ளன.

அந்த வகையில், பொங்கல் பண்டிகைக்குப் பிறகு, நேற்று ஒரே நாளில் 26,981 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ள அறிக்கையில்,

“தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 26,981 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாகவும், இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 30,14,235 ஆக உயர்ந்து உள்ளதாகவும்” தெரிவித்து உள்ளது.

அத்துடன், “தமிழகத்தில் கொரோனாவில் இருந்து மேலும் 17,456 பேர் குணமடைந்து உள்ளனர் என்றும், இதன் மூலமாக 28,06,501 பேர் தற்போது வரை குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்” என்றும், கூறப்பட்டு உள்ளது.

மேலும், “தமிழ்நாட்டில் கொரோனாவால் நேற்று ஒரே நாளில் 35 பேர் உயிரிழந்து உள்ளனர் என்றும், அந்த வகையில் தனியார் மருத்துவமனையில் 23 பேரும், அரசு மருத்துவமனையில் 12 பேரும் உயிரிழந்து உள்ளனர்” என்றும், குறிப்பிடப்பட்டு உள்ளது.

“இதன் மூலமாக, தமிழ்நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கையானது 37,073 ஆக அதிகரித்து உள்ளது.

மிக முக்கியமாக, “சென்னையில் மட்டும் நேற்று ஒரே நாளில் 8007 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், இதனால் சென்னையில் மொத்தம் 668627 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர்” என்றும், தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதே போல், “தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை தற்போது 1,70,661 ஆக அதிகரித்து” உள்ளது.

குறிப்பாக, “தமிழகத்தில் இது வரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 17,60,772 பேர் ஆண்கள் என்றும், பெண்களில் இது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் மொத்த எண்ணிக்கை 12,53,425 பேர்” என்றும், தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதே போல், “சென்னையில் 9 ஆயிரத்து 237 தெருக்களில் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாகவும், ஆனால் தமிழகம் முழுவதும் 3 ஆயிரத்து 787 இடங்கள் கொரோனா கட்டுப்பாட்டு பகுதியாக உள்ளதாகவும்” அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

இந்த நிலையில் தான், தமிழ்நாட்டில் இன்று பூஸ்டர் டோஸ் தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

அதாவது, தமிழ்நாடு முழுவதும் 600 க்கும் அதிகமான இடங்களிலும், சென்னையில் 160 இடங்களிலும் இன்று பூஸ்டர் டோஸ் தடுப்பூசி முகாம் செலுத்தும் பணிகள் நடைபெறுகின்றன.

அந்த வகையில், 60 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கும், முன் களப்பணியாளர்களுக்கு பூஸ்டர் டோஸ் செலுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.