இமாச்சலப் பிரதேசத்தில் கடத்தப்பட்ட 8 வயது சிறுமி எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இமாச்சலப் பிரதேசத்தில் அமிர்புர் பகுதியைச் சேர்ந்த 8 வயது சிறுமி மாயமானதாக, அவரது பெற்றோர் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில், கடத்தப்பட்ட 8 வயது சிறுமியின் உடல் எரிக்கப்பட்ட நிலையில் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இது குறித்து விரைந்து சென்ற போலீசார், எரிக்கப்பட்ட சிறுமியின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோரிதனைக்க அனுப்பி வைத்தனர்.
மேலும், இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில், அந்த சிறுமியை லாரி ஓட்டுநர் ஒருவர் எரித்துக் கொன்றிருக்கலாம் என்பதைக் கண்டு பிடித்தனர். அத்துடன், சம்பவ இடத்திற்கு தடயவியல் வல்லுநர்கள், மோப்ப நாய்கள் வரவைக்கப்பட்டு, சிறுமியை கொன்ற கொலையாளியைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் தற்போது ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம், அப்பகுதியில் கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
அதே போல், பட்டுக்கோட்டை அருகே கிரிக்கெட் விளையாட்டில் ஏற்பட்ட தகராறு காரணமாக, இளம் பெண் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அடுத்த கார்கா வயல் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சக்திவேல் - சுந்தரி தம்பதிக்கு; சண்முகப்பிரியா, கௌசல்யா, சந்தியா, கௌசிகா என்ற 4 மகள்களும், 15 வயதில் ராஜா வசந்த சேகரன் என்ற ஒரு மகனும் உள்ளனர்.
இதனிடையே, சக்திவேல் வீட்டின் அருகிலேயே வசித்து வரும் குபேந்திரன் - சரோஜா தம்பதியினருக்கு 28 வயதில் குரு பிரபு, என்ற ஒரு மகன் உள்ளார்.
இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு, சக்திவேல் மகன் ராஜா வசந்த சேகரனும் - குபேந்திரன் மகன் குரு பிரபுவும் அந்த பகுதியில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது, அந்த 2 பேருக்கும் இடையே சண்டை வந்துள்ளது.
இந்த கிரிக்கெட் விளையாட்டில் ஏற்பட்ட சண்டை காரணமாக, 2 குடும்பங்களுக்கு இடையே தொடர்ந்து சண்டை வந்துள்ளது. தற்போது, மீண்டும் சண்டை வந்த நிலையில், இரு தரப்புக்கும் இடையே வாக்கு வாதம் முற்றி, கை கலப்பாக மாறி உள்ளது.
இந்த கை கலப்பில் சக்தி வேலின் மகள் சண்முகப்பிரியாவை, குபேந்திரன் மற்றும் அவரது மனைவி சரோஜா, அவர்களுடைய மகன் குரு பிரபு ஆகிய 3 பேரும் சேர்ந்து மண் வெட்டியால் தலையில் பயங்கரமாக தாக்கி உள்ளனர். இதில், சண்முகப்பிரியா சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர், பரிதாபமாக உயிரிழந்தார்.
சண்முகப்பிரியாவை தாக்கும் போத, அவரை காப்பாற்ற சென்ற அவரது 2 சகோதரிகளையும், குபேந்திரன் மற்றும் குரு பிரபு ஆகிய இருவரும் தாக்கியதில், அவர்களுக்கும் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் சரிந்துள்ளனர்.
இதனையடுத்து, அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பட்டுக்கோட்டை காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். இது குறித்து விரைந்து வந்த போலீசார், உயிரிழந்த சண்முகப்பிரியாவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்குப் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் படு காயமடைந்த சண்முகப்பிரியாவின் சகோதரிகளையும் மீட்டு, போலீசார் சிகிச்சைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுமதித்தனர்.
இதனைத் தொடர்ந்து, குபேந்திரன், சரோஜா, குரு பிரபு ஆகிய 3 பேரையும் கைது செய்த போலீசார், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே, கிரிக்கெட் விளையாட்டால் ஏற்பட்ட தகராறில், ஒரு இளம் பெண் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பட்டுக்கோட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
அதேபோல், சிவகாசியில் இளம் பெண்ணை கழுத்தை அறுத்து கொன்ற கணவனை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அடுத்த பள்ளப்பட்டி இந்திராநகரை சேர்ந்த 24 வயதான சரவண குமாருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த 22 வயதான ஜெயலட்சுமிக்கும், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. தற்போது, இவர்களுக்குக் கயல் விழி என்ற 9 மாத பெண் குழந்தை உள்ளது.
இதனிடையே, இவர்கள் இருவரும், அந்த பகுதியில் உள்ள இரு வேறு பட்டாசு ஆலைகளில் பணியாற்றி வந்தனர். கூலி தொழிலாளிகளாக வேலை செய்து வந்தனர். இந்நிலையில் கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. வழக்கம் போல், இருவருக்கும் இடையே தற்போதும் சண்டை வந்துள்ளது.
அப்போது கடும் ஆத்திரம் அடைந்த கணவர் சரவணக் குமார், ஜெயலட்சுமியின் கழுத்தை கத்தியால் அறுத்து கொடூரமான முறையில் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி உள்ளார்.
இது குறித்து தகவல் கிடைத்து விரைந்து வந்த போலீசார், உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தலைமறைவாக உள்ள சரவணக் குமாரை அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
சரவணக்குமாரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், “மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்து அவரை கொன்றது” தெரியவந்துள்ளது. இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.