தமிழகத்தில் மேலும் 89 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, இன்று முதல் வரும் 30 ஆம் தேதி வரை 5 வது முறையாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்கள் தவிர, மற்ற அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா ஓரளவுக்குக் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.
செங்கல்பட்டு மாவட்டத்தில் புதிதாக இன்று 53 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதனால், அவர்களுடன் தொடர்பிலிருந்த அனைவருக்கும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால், செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,230 ஆக உயர்ந்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று மேலும் 36 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அவர்களுடன் தொடர்பிலிருந்த அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதிகபட்சமாக ஆவடியில் இன்று ஒரே நாளில் 14 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 984 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், கொரோனா ஊரடங்கு காலத்தில் ஊரடங்கை மீறி வாகனங்களில் வெளியே சுற்றிய 5,64,440 பேர் கைதாகி ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலும், இதுவரை 4,38,720 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், இதுவரை 5,28,459 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அத்துடன், தமிழகத்தில் இதுவரை ஊரடங்கை மீறியதாக 9.31 கோடி ரூபாய் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளதாகத் தமிழக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் விரைவில் கோவில்களைத் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ நம்பிக்கைத் தெரிவித்தார்.
இதனிடையே, ஜூன் மாத பொது முடக்கத்திலாவது கொரோனாவை கட்டுப்படுத்த முதலமைச்சர் முயற்சிக்க வேண்டும் என்று, எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை கேட்டுக்கொண்டுள்ளார். அதற்குப் பதிலாக, அதிமுகவுக்குள் குழு அரசியல் நடத்த எதிர்க்கட்சிகளை ஏசவும் பேசவும் செய்வதால் எந்த பயனும் ஏற்படாது என்றும், மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.