“800 படத்தில் நடிக்க வேண்டாம்” என்று, நடிகர் விஜய் சேதுபதிக்கு முத்தையா முரளிதரன் கோரிக்கை விடுத்து உள்ளார்.

இலங்கை தமிழரான கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு கதையானது, “800” என்ற பெயரில் தமிழில் திரைப்படமாக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தில் முத்தையா முரளிதரனாக நடிகர் விஜய் சேதுபதி நடித்து வருகிறார். இலங்கை தமிழராகவே இருந்தாலும் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன், இலங்கை தமிழர்களுக்கு எதிரான போரின் போது, “தமிழன் என்பதை மறந்து, அவர் சிங்களர்கள் பக்கம் நின்று, அதை நியாயப்படுத்திப் பேசவும் செயல்படவும் செய்ததாக” கடும் விமர்சனங்கள் எழுந்தன. இதனால், முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்க வேண்டாம் என்று, நடிகர் விஜய் சேதுபதிக்கு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர்.

இது தொடர்பாக நடிகர் விஜய் சேதுபதி தரப்பில் இருந்து எந்த பதிலும் அளிக்கப்படாத நிலையில், முத்தையா முரளிதரன், கடந்த சில தினங்களுக்கு முன்பு தன் தரப்பு விளக்கத்தை அளித்தார்.

அதில், “என்னைத் தமிழினத்திற்கு எதிரானவன் போல சித்தரிப்பது வேதனையாக இருக்கிறது என்று, பள்ளிக் காலம் முதலே தமிழ் வழியில் படித்துவந்தவன், எனக்குத் தமிழே தெரியாது என்பது தவறான செய்தி. இலங்கைத் தமிழரானது எனது தவறா?” என்றும், முத்தையா முரளிதரன் கவலையுடன் கேள்வி எழுப்பியிருந்தார்.

“7 வயது முதல் போர் நிறைந்த சூழலில் இருந்த நான், எப்படி கிரிக்கெட் அணியில் இடம் பெற்று சாதித்தேன் என்பது குறித்த படம் தான் “800” என்றும், முத்தையா முரளிதரன் விளக்கம் அளித்தார்.

“சிலர் அறியாமையாலும் சிலர் அரசியல் காரணத்திற்காகவும், என்னைத் தமிழினத்திற்கு எதிரானவர் என்பது போல சித்தரிப்பது வேதனையளிக்கிறது” என்றும், முத்தையா முரளிதரன் தெரிவித்திருந்தார்.

முத்தையா முரளிதரன் விளக்கம் அளித்தும், இது தொடர்பான சர்ச்சைகள் ஓயாத நிலையில், கடும் எதிர்ப்புகள் எழுந்த வண்ணம் உள்ளன. அதன் தொடர்ச்சியாக, இலங்கை ஊடகம் ஒன்றுக்கு நடிகர் விஜய் சேதுபதி அளித்த பேட்டியில், “இப்போது முன் வைக்கப்படும் அனைத்து கேள்விகளுக்கும்
“800” திரைப்படம் பதில் அளிக்கும்” என்று தெரிவித்திருந்தார். அத்துடன், “800” படத்தில் நடிப்பதில் உறுதியாக இருக்கின்றேன் என்று விஜய் சேதுபதி மனம் திறந்து பேசினார்” என்றும், செய்திகள் வெளியானது. இதனை முத்தையா முரளிதரன் தனது இணையப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதன் தொடர்ச்சியாக, “800 படத்தில் நடிக்க வேண்டாம்” என்று, நடிகர் விஜய் சேதுபதிக்கு முத்தையா முரளிதரன் கோரிக்கை விடுத்து உள்ளார்.

இது தொடர்பாக முத்தையா முரளிதரன் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டு உள்ளார். அதில், “எனது வாழ்க்கை வரலாறு படமான “800” படத்தில் இருந்து விலகிக்கொள்ளுங்கள்” என்று விஜய் சேதுபதிக்கு முத்தையா முரளிதரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும், “ என் மீது கொண்ட தவறான புரிதலால் விஜய் சேதுபதிக்குப் பல தரப்பிலிருந்தும் “800” படத்தில் இருந்து விலகிக்கொள்ளும்படி கோரிக்கைகள் வருவதை நான் அறிவேன். இதன் காரணமாக, என்னால் தமிழ் நாட்டின் தலைசிறந்த கலைஞன் பாதிக்கப்படுவதை நான் விரும்பவில்லை” என்றும் குறிப்பிட்டு உள்ளார்.

குறிப்பாக, “விஜய் சேதுபதியின் எதிர்கால கலை பயணத்தில் இதனால் தடை எதுவும் வந்துவிடக்கூடாது என்பதற்காக, இந்த படத்தில் இருந்து விலகிக்கொள்ளுமாறு விஜய் சேதுபதியை நான் கேட்டுக்கொள்கிறேன்” என்றும், முத்தையா முரளிதரன் கோரிக்கை விடுத்து உள்ளார்.

“எதிர்கால தலைமுறையினருக்கும், இளம் கிரிக்கெட் வீரருக்கும் ஒரு உத்வேகம் கிடைக்கும் என்பதால், என் சுய சரிதையைப் படமாக எடுக்க நான் சம்மதம் தெரிவித்தேன்” என்றும், முத்தையா முரளிதரன் விளக்கம் அளித்து உள்ளார்.

இந்நிலையில், “800 படத்தில் நடிக்க வேண்டாம்” என்று, நடிகர் விஜய் சேதுபதிக்கு முத்தையா முரளிதரன் விடுத்த கோரிக்கையை மேற்கொள் காட்டி, “நன்றி வணக்கம்” என்று, முத்தையா முரளிதரன் அறிக்கையுடன் விஜய் சேதுபதி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார். இதனால், விஜய் சேதுபதியின் “நன்றி வணக்கம்” பதிவானது, “800" படத்தில் இருந்து விலகுவதாகவே பொருள் கொள்ளப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.