திருவள்ளூர் மாவட்டத்தில் காவல் நிலையத்தில் ஆஜராக சொல்லி 7 வயது சிறுமிக்கு போலிசார் சம்மன் அனுப்பிய நிலையில், மீண்டும் அதனைத் திரும்பப் பெற்றுள்ள சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாயுமான் செட்டி தெருவில் வசிக்கும் பாஸ்கர் என்பவரின் மகள் 7 வயதான அதிகை முத்தரசி என்ற சிறுமி, இந்த பகுதியில் செயல்பட்டு மீஞ்சூர் ஒன்றிய பொன்னேரி அரசு தொடக்கப் பள்ளியில் பயிற்று வருகிறார்.

பொன்னேரி தொடக்கப் பள்ளியில் மொத்தம் 71 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். கடந்த 1964 ஆம் ஆண்டு பொன்னேரி அகத்தீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான 20 சென்ட் நிலமானது பள்ளிக்கூடம் தொடங்குவதற்காகக் கொடுக்கப்பட்டது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், அந்த பள்ளிக்கு தற்போது வெறும் 8 சென்ட் நிலம் மட்டுமே பள்ளியின் வசம் உள்ளது. பள்ளியில் தலைமையாசிரியர் சீதா லட்சுமி மற்றம் பிற 3 ஆசிரியர்கள் என மொத்தம் 4 பேர் பணியாற்றி வருகின்றனர்.

மேலும், இந்த பள்ளிக்கு முறையான கட்டிடம் இல்லை என்றும் கூறப்படுகிறது. பள்ளி அருகே குப்பை கொட்டப்பட்டு வருவதாகவும் புகார்கள் உள்ளன.

குறிப்பாக, “இந்த பள்ளிக்கூடத்தின் அவல நிலையைக் குறிப்பிட்டு, எங்கள் பள்ளிக்கு புதிய வகுப்பறை கட்டடம், விளையாட்டு மைதானம் வேண்டும்” என்று, மாணவிகள் தரப்பில் அதிகாரிகள் மற்றும் நீதிமன்றத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இந்த வழக்கைக் கடந்த மார்ச் மாதம் 2 ஆம் தேதி விசாரித்த நீதிமன்றம், “பள்ளிக்குத் தேவையான கட்டிட வசதியை ஏற்படுத்தித் தருவதுடன், சுற்றுச் சுவர் முறையாக அளவீடு செய்து கட்டி முடிக்க வேண்டும் என்றும், விளையாட்டு மைதானம் அமைத்துத் தரப்பட வேண்டும் என்றும்” அதிரடி உத்தரவு பிறப்பித்தது.

இதனையடுத்து, குறிப்பிட்ட அந்த பள்ளியில் எந்த ஒரு அளவீடும் செய்யாமல், ஆறடி உயரச் சுற்றுச் சுவரை சுமார் 60 அடி நீளத்திற்கு ஒரே நாளில் கட்டி முடிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

அத்துடன், ஒரே நாளில் அந்த பள்ளிக்கு பெயிண்ட் அடிக்கப்பட்டு உள்ளதாகக் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.

இதன் தொடர்ச்சியாக, “சரியான முறையில் அளவீடு செய்து மதில் சுவர் கட்ட வில்லை என்றும், நீதிமன்ற உத்தரவை அதிகாரிகள் முறையாக பின் பற்றவில்லை என்றும், பள்ளிக்கு விளையாட்டு மைதானம் சரியாகச் செய்து தரவில்லை என்றும், உயர் அதிகாரிகளிடம் மாணவியின் தரப்பில் புகார் அளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், பொன்னேரி அடுத்துள்ள மீஞ்சூர் காவல் நிலைய ஆய்வாளர் சார்பில், “அந்த 7 வயது மாணவி விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும்” என்று, வீட்டிற்கே நேரில் வந்து சம்மன் வழங்கியதாகத் தெரிகிறது. இதனால், சிறுமியின் பெற்றோர் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம், அந்த கிராமம் முழுவதும் பரவியதால், கடும் கண்டனங்களும், விமர்சனங்களும் எழுந்தன.

இதனையடுத்து, “7 வயது மாணவி அதிகை முத்தரசி, மீஞ்சூர் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகத் தேவை இல்லை” என்று, தற்போது காவல் துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

புகார் அளித்த சிறுமியின் வயதைச் சரி பார்க்காமல், தவறுதலாக 7 வயது சிறுமிக்குக் காவல் துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்ட சம்பவம், இணையத்தில் தற்போது வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.