விழுப்புரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தள்ளுவண்டியில் 5 வயது சிறுவன் பசியால் இறந்ததாகக் கூறப்பட்ட நிலையில், அவனை இருவர் தூக்கிச்செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
விழுப்புரம் பகுதியில் அமைந்துள்ள சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இருக்கும் மேல் தெரு என்னும் பகுதியில் உள்ள ஒரு மருந்துக்கடையின் அருகில், இஸ்திரி தள்ளுவண்டி ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்திருந்தது. இதில், 5 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன், கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்டது, அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அந்த தள்ளுவண்டியில் துண்டை விரித்து, அதன் மீது அந்த சிறுவன் கிடத்தப்பட்டிருந்தான். இதனை சம்பவங்களை அந்த வழியாக சென்ற பொது மக்கள் பார்த்து விட்டு, விழுப்புரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இது குறித்து உடனடியாக விரைந்து வந்த போலீசார், சம்பவ இடத்தில் பரிதாபமாக கிடந்த சிறுவனின் உடலை பார்வையிட்டு, அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை மேற்கொண்டனர். அதன் தொடர்ச்சியாகவே, சிறுவனின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அத்துடன், சடலமாக மீட்கப்பட்ட அந்த 5 வயது சிறுவன், நீலநிற டி சர்ட்டும், வெள்ளை மற்றும் சிகப்பு நிற கட்டம் போட்ட டிரவுசரும் அணிந்திருந்ததைக் குறித்துக்கொண்ட போலீசார், “இந்த சிறுவன் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவன்?” என்கிற விவரம் குறித்து, அந்த பகுதி மக்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வந்தனர்.
மேலும், “அந்த பகுதியில் எதாவது ஒரு கள்ளக் காதல் விவகாரத்தில், இந்த சிறுவனை யாராவது தலையணையால் அமுக்கியோ, கழுத்தை நெரித்தோ கொலை செய்தனரா?” என்றும், பல்வேறு கோணங்களிலும் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.
இவற்றுடன், சிறுவன் இறந்து கிடந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிப் பதிவுகளைக் கைப்பற்றியும் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் தான், “அந்த சிறுவன் பட்டினியால் உயிரிழந்துள்ளான்” என்கிற அதிர்ச்சி தகவல், பிரேதப் பரிசோதனை அறிக்கையில் மூலமாகக் கடந்த வாரம் தெரியவந்தது.
குறிப்பாக, “இந்த சிறுவன் கொலை செய்யப்படவில்லை என்றும், சிறுவனின் குடலில் 2 நாட்களாக உணவு, தண்ணீர் இல்லை என்றும் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாகவே, உயிரிழந்த சிறுவன் யாருடைய குழந்தை என்று கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த விசாரணையின் ஒரு பகுதியாக, அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தபோது, அதில் 2 சிசிடிவி காட்சிகள் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியது.
அதன்படி, அந்த 2 சிசிடிவி காட்சியிலும் “2 இடங்களில் 2 நபர்கள் நடந்து செல்கின்றனர். அதில் ஒரு நபர், ஒரு சிறுவனைச் சுமந்து வரும் காட்சியும், அதன் பிறகு அவர் கையில் ஒரு கை தடியோ அல்லது இரும்பு பைப்பையோ தூக்கி வரும் காட்சியும்” அதில் இடம் பெற்று இருக்கிறது.
அதே போல் மற்றொரு சிசிடிவி காட்சியில், “குழந்தை உடல் மீட்கப்பட்ட இடத்தில் சிறுவனை அவர்கள் தூக்கி வருகின்ற அந்த காட்சியும்” இடம் பெற்றிருக்கிறது.
மிக முக்கியமாக, “சிறுவனைத் தூக்கி வரும் 2 பேரும் வட மாநிலத்தவர்கள் போன்று இருப்பதால், அவர்கள் குழந்தையைக் கடத்தி வந்து சாலையோரங்களில் பிச்சை எடுக்க வைத்து இருக்கக்கூடும்” என்றும், சந்தேகம் எழுந்து உள்ளது.
இந்த நிலையில் தான், இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளை வெளியிட்டுள்ள போலீசார், இது தொடர்பாக ஒருவரை பிடித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
இதனிடையே, போலீசார் வெளியிட்டுள்ள இந்த சிசிடிவி காட்சிகள் மூலமாக, விரைவில் சிறுவனின் இறப்பில் துப்புத் துலங்கும் என்றும் போலீசார் தரப்பில் எதிர்பார்க்கப்படுகிறது.